| ADDED : ஜூலை 26, 2011 09:34 PM
ராஜபாளையம்:ராஜபாளையம் கோடைகாலை குடிநீர் தேக்கத்தில் தண்ணீர் குறைந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது.இதை தவிர்க்க புதிய அணைக்கான பணியை துவக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.ராஜபாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழைகாலங்களில் கிடைக்கும் மழைநீரை, அணையில் தேக்கி கோடை காலத்திலும் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 30 ஆண்டுகளுக்கு முன் மலையடிவாரத்தில் 24 அடியில் கோடைகால குடிநீர் அணை அமைக்கப்பட்டது. இங்கிருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட நிலையில் ராஜபாளையம் நகருக்கு பைப் மூலம் செல்கிறது. நகரில் உள்ள எட்டு தொட்டிகளில் நீர் தேக்கப்பட்டு, மேட்டு பகுதிகளுக்கு மட்டும் மின்மோட்டார் மூலம் சப்ளை செய்யப்படுகிறது.இந்த ஆண்டு பருவ மழை குறைந்ததால், அணைக்கு வரும் தண்ணீர் அளவும் குறைந்தது. மேலும், வெயிலும் அதிகரித்து அணையின் நீர்மட்டமும் குறைந்ததால் ராஜபாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி கமிஷனர் நடராஜன் கூறுகையில், ''அணை நீர்மட்டம் குறைந்து உள்ளதால், ஆயில் இன்ஜின் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. இது ஒரு மாதத்திற்கு தாக்குபிடிக்கும். அணையை சுற்றி ஆழ்துளை குழாய், கிணறுகள் உள்ளன. இவற்றின் மூலம் சில மாதங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யலாம். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை,'' என்றார்.தற்போது உள்ள அணை அருகே, புதிய அணை அமைக்க பலகோடி ரூபாயில் நடந்த பணிகள், பாதியிலேயே நிற்கின்றன. 'இந்த அணைக்காக மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் அய்யனார்கோயில் ஆறு அருகே நீர் தேக்கம் அமைக்க வனத்துறையின் ஒப்புதல் கிடைக்க தாதமாவதால், பணிகள் கிடப்பில் உள்ளதாக ,''அதிகாரிகள் கூறுகின்றனர். வனத்துறை ஒப்புதல் பெற்று, புதிய அணை பணியை உடனே துவக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.