பயிர்களுக்கு அதிக பாதிப்பு இருந்தும் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை
அருப்புக்கோட்டை: இந்த ஆண்டு பயிர்களுக்கு அதிக பாதிப்பு இருந்தும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் கூறினர்.அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு தலைமை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள்
ராம்பாண்டியன், காவிரி, வைகை, குண்டாறு பாசன சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவர்: அருப்புக்கோட்டை குல்லூர்சந்தை அணைக்கு தண்ணீர் வரும் கௌஷிகா ஆற்றில் பெரும்பகுதி விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி கழிவு நீர் விடப்படுகிறது இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருச்சுழி கண்மாய்க்கு போதிய நீர்வரத்து இல்லாமல் உள்ளது. குண்டாறு பந்தனேந்தல் தடுப்பணையிலிருந்து தண்ணீர் கூடுதலாகச் செல்ல கால்வாயை அகலப்படுத்த வேண்டும். இந்த ஆண்டு பயிர்களுக்கு அதிக பாதிப்பு இருந்தும் பயிர் காப்பீட்டு துறையில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை.சிவசாமி, இந்திய விவசாயிகள் சங்கம், காரியாபட்டி: காரியாபட்டி அருகே சிறுகுளம் கண்மாய் மடை இரண்டு ஆண்டுகளாக பழுதாகி தண்ணீர் வீணாக செல்கிறது. அதை பழுது நீக்க வேண்டும்.அர்ஜுனன், மூன்றடைப்பு: தோட்டக்கலை துறை மூலம் வழங்கக்கூடிய விதைகள் தரமான விதைகளா என உரிய முறையில் பரிசோதனை செய்த பின்னர் தான் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.செல்வம், விவசாயி, மேலையூர்: பரளச்சி கண்மாயின் பழுதான மடைகளை உடனே சரி செய்ய வேண்டும். மழைக்காலத்திற்குள் சரி செய்தால் தண்ணீர் சேகரமாக வசதியாக இருக்கும்.ஜனார்த்தனன், விவசாயி, மீனாட்சிபுரம்: இந்த ஆண்டு கூட்டுறவுத் துறையில் குறைந்தபட்ச கடனுக்கு தனிநபர் ஜாமின் கேட்கக்கூடாது.கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டு மனு அளித்தனர். அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி தாசில்தார்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.