சிவகாசி பகுதியில் 10 கண்மாய்களை துார்வார நீர்வளத் துறையினர் பரிந்துரை
சிவகாசி: சிவகாசி பகுதியில் மிகவும் மோசமாக உள்ள மத்தியசேனை உள்ளிட்ட 10 கண்மாய்களை சீரமைப்பதற்காக நீர்வளத் துறையினர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி கண்மாய்களை விரைவில் துார்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். சிவகாசி பகுதியில் கண்மாய் பாசனத்தை நம்பி மக்காச்சோளம், நெல், எள், பருத்தி, வாழை, உளுந்து உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றது. அதே சமயத்தில் இப்பகுதியில் பெரும்பான்மையான கண்மாய்கள் சீமை கருவேல மரங்கள் நிரம்பி ஆக்கிரமித்துள்ளது. தவிர கண்மாயின் கரைகள், மடைகள் சேதம் அடைந்து பாசனத்திற்கு வழியில்லாமல் உள்ளது. சமீபத்தில் இப்பகுதியில் ஓரளவிற்கு மழை பெய்தும்கண்மாய்க்கு தண்ணீர் வரவில்லை. கண்மாய்க்கு தண்ணீர் வந்திருந்தாலும் அதனை பாசனத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து நீர்வளத் துறையினர் மிகவும் மோசமான கண்மாய்களை தேர்வு செய்து அவற்றினை சீரமைப்பதற்காக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி மத்திய சேனை, விஜய கரிசல்குளம் பாண்டியன்குளம் கண்மாய், வெம்பக்கோட்டை உள்ளிட்ட 10 கண்மாய்களில் சீமை கருவேல மரங்களை அகற்றி, கரைகள், மடைகளை சீரமைக்க நீர்வளத் துறையினர் முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளனர். எனவே அடுத்த மழைக்காலம் துவங்குவதற்குள் உடனடியாக கண்மாய்களை துார்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.