உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வெயிலுக்கு புழுதி; மழைக்கு சகதி

வெயிலுக்கு புழுதி; மழைக்கு சகதி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆண்டுக்காண்டு குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அங்கு முறையான ரோடு, வாறுகால் வசதி இல்லாமல் மழைக்காலத்தில் சகதியும், வெயில் காலத்தில் புழுதியும் ஏற்பட்டு மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர் அப்பகுதி குடியிருப்பாளர்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியின் 33 வார்டுகளிலும், ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சிகளிலும் சுமார் 1.75 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஆண்டுக்காண்டு மக்கள் தொகை அதிகரித்து வருவதால் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் நகர் பகுதியில் பெரும்பாலான வீடுகளில் முதல்மாடி கட்டி குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். நகரின் விரிவாக்க பகுதியான தன்யா நகர், அசோக் நகர், கிருஷ்ணா நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணி அதிகரித்து வருகிறது. இதேபோல் இந்திரா நகர்,வள்ளுவர் நகர், பாண்டியன் நகர், சத்யா நகர், அங்குராஜ் நகர், தைலாபுரம், கோதை நகர், ராஜீவ் காந்தி காலனி, முல்லை நகர் உட்பட நகரின் எல்லையோர ஊராட்சி பகுதிகளிலும் தற்போது குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலான பகுதிகளில் வீடுகள் கட்டி பல ஆண்டுகளான நிலையில் இன்னும் முறையான ரோடு, வாறுகால்கள் வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உள்ளாட்சி நிர்வாகத்திற்கு ஆண்டுதோறும் முறையாக சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி செலுத்திய போதிலும் அடிப்படை வசதிகளான ரோடு, வாறுகால்கள் வசதியை செய்து தருவதில் உள்ளாட்சி அமைப்புகள் மிகுந்த கால தாமதம் செய்து வருகின்றன. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டும், கொசு தொல்லை அதிகரித்தும், மழைக்காலங்களில் சகதி ஏற்பட்டும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுவது தொடர்கதையாகவே நீடிக்கிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு சில புதிய குடியிருப்பு பகுதியில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தற்போது ரோடு, வாறுகால் அமைக்கும் பணி நடக்கிறது. இதேபோல் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் மகாத்மா நகர், இந்திரா நகர் பகுதிகளிலும் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. இதிலும் சில இடங்களில் முறையான வாறுகால் வசதி அமைக்கப்படவில்லை. எனவே, புதிய குடியிருப்பு பகுதிகளில் முறையான ரோடு, வாறுகால், குடிநீர் வசதிகள் செய்து தர உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை