உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எளிதான உயிரியல் தேர்வு; சென்டம் வாய்ப்பு அதிகம்

எளிதான உயிரியல் தேர்வு; சென்டம் வாய்ப்பு அதிகம்

விருதுநகர்:பிளஸ் 2 உயிரியல் தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்ததால் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறுவர் நன்கு படித்த மாணவர்கள் அதிகளவில் சென்டம் பெறுவர் என விருதுநகர் மாவட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

அதிக மதிப்பெண் பெறலாம்:

இ.லத்திகா, ஷத்திரிய வித்யாசாலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்:உயிரியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்களில் தாவரவியல் கேள்விகள் எளிதில் விடையளிக்கும் வகையில் இருந்தது. விலங்கியலில் ஒரு வினா மட்டும் குழப்பும் வகையில் இருந்தது.நன்கு தயாராகி இருந்தால் அதற்கும் பதில் அளித்து விடலாம். 2 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன.5 மதிப்பெண் பெரிய வினாக்களை 'பாயின்டுகளாக' சுருக்கி பதிலளிக்கும் வகையில் 3 மதிப்பெண் வினாக்களாக கேட்டிருந்தனர்.நன்றாக படித்தவர்களுக்கு நிறைய மதிப்பெண் வாய்ப்பு உள்ளது. சராசரியாக படித்த மாணவர்கள் அதிகம் மதிப்பெண் பெறுவர்.

எளிமையாக இருந்தது

வி. கிருத்திகா, தேவாங்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை :இன்றைய தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. புத்தகத்தில் சிறிய அளவில் மட்டும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 2, 3, 5 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் தெரிந்ததாகவும் எளிதாக இருந்தது. கட்டாய வினாக்கள் அனைத்தும் தெரிந்ததாக இருந்தது.அதனால் எந்த வித பயமின்றி ரிலாக்ஸ் ஆக எழுதியுள்ளோம். விலங்கியல் பாடப்பிரிவில் 5 மதிப்பெண் வினாக்கள் மட்டும் எதிர்பாராத கேள்விகளாக இருந்தன. சராசரி மாணவிகளும் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். மொத்தத்தில் தேர்வு எளிமையாகவும் அதிக மண் மதிப்பெண்கள் பெற வாய்ப்பாகவும் உள்ளது.

அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு

சஞ்சய் சக்தி போஸ், கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்:உயிரியல் வினாத்தாளில் அனைத்து 2 மதிப்பெண் வினாக்களும் எளிமையாக இருந்தது. விலங்கியலில் மூன்று மதிப்பெண் கட்டாய வினா சிறிது கடினம். ஒரு மதிப்பெண் வினாவில் புத்தகத்தில் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தது. இது தவிர எதிர்பார்த்த வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டிருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் அனைவரும் எழுதும் வகையில் மிகவும் எளிதாக இருந்தது. உயிரியல் பாடத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

புத்தகத்திலிருந்தே கேள்விகள் அதிகம்

சுபாஷினி, ஜேசீஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, சிவகாசி:ஒரு மதிப்பெண் வினாக்களில் விலங்குகள், தாவரவியல் பிரிவில் நான்கு கேள்விகள் மற்றும் யோசனை செய்து எழுதும்படி இருந்தது. இரு, மூன்று , ஐந்து மதிப்பெண் வினாக்களும் புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டிருந்தது. புத்தகத்தை முழுமையாக படித்திருந்தால் எளிதாக 100 சதவீதம் மதிப்பெண் எடுத்து விடலாம். சராசரியாக படிக்கும் மாணவர்கள் எளிதில் 50 மதிப்பெண் எடுக்கும் அளவிற்கு எளிதாக இருந்தது.

100 மதிப்பெண் பெறுவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்

க. ரமேஷ் குரு, ஆசிரியர், நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்:முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் 15 மதிப்பெண்கள் வரை இடம் பெற்றிருந்தது. 5 மதிப்பெண்களுக்கான புத்தக குறிப்பில் இருந்து 2 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டது. மூன்று, ஐந்து மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. மாணவர்களுக்கு தேர்வு எளிதாக அமைந்திருக்கும்.பள்ளிகளில் நடக்கும் தேர்வுகளில் சராசரி மதிப்பெண்கள் எடுப்பவர்கள் இந்த முறை பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள். ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தவற்றை சரியாக படித்தவர்கள் எளிதாக தேர்ச்சி பெறுவார்கள் என்பதால் தோல்விக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும். நுாறு மதிப்பெண் பெறுவர்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ