உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வயநாடு நிலச்சரிவிற்கு பின் ஸ்ரீவி.,யில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வயநாடு நிலச்சரிவிற்கு பின் ஸ்ரீவி.,யில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்:கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவிற்கு பிறகு புலிகள் காப்பக பகுதியான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மலையடிவார பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தோப்புகளை தினமும் யானைகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் செண்பகதோப்பு பகுதியில் 3 முதல் 7 யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சில நாட்களாக பந்தபாறை, ரெங்கர் கோயில், ரெங்கர் தீர்த்தம் பகுதிகளில் நடமாடிய யானைகள் இரண்டு நாட்களாக மேல தொட்டியபட்டி குடியிருப்பு பகுதி வரை வந்துள்ளன.அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஐம்பதாண்டுகளுக்கு மேலாக மலையடிவார தோப்புகளில் தங்கி தோப்புகளை பாதுகாத்து வருகிறோம்.அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வழிதவறி வரும் யானைகள் ஒரிரு நாட்களில் மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விடும்.ஆனால் 3 மாதங்களாக தோப்புகளில் கூட்டமாக யானைகள் திரிவதை பார்க்கும் போது வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவிற்கு பிறகு இடம் பெயர்ந்ததாக அறிய முடிகிறது. இரவு வனத்துறையினர் வந்து யானைகளை விரட்டினாலும் மீண்டும் மாலை நேரங்களில் தோப்புகளுக்கு அவை வந்து விடுகின்றன. இதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தால் மட்டுமே பயிர்களை பாதுகாக்க முடியும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ