ஆற்றை ஆக்கிரமித்து கால்நடை தீவனம் வளர்ப்பு
ராஜபாளையம்: ராஜபாளையம் முடங்கியாறு பாலம் அருகே ஆற்றை ஆக்கிரமித்து கால்நடை தீவனம் வளர்ப்பதால் கண்மாய்களுக்கு நீர்வரத்து தடைப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அய்யனார் கோயில் ஆற்றின் மூலம் பல்வேறு கண்மாய்களுக்கு நீர் வரத்து மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுவருகிறது. ஆற்றின் நீர் வரத்தை கண்மாய்களுக்கு பிரித்து விநியோகம் செய்வதற்காக முடங்கியாற்றில் தடுப்பணை கட்டி தெற்கு பகுதி, கிழக்கு பகுதி என ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நீர் பகிர்மான அடிப்படையில் தண்ணீர் சென்று வருகிறது.இந்நிலையில் ஆற்றின் தடுப்பணை கிழக்கு பகுதி அருகே தனிநபர் மண்மேடு உருவாக்கி கால்நடை தீவனப்புல் வளர்த்து வருவதால் அப்பகுதி கண்மாய்களுக்கு நீர் வரத்து பாதிக்கப்படுகிறது. இது குறித்து விவசாயி ராகவராஜா: முடங்கியாறு தடுப்பணையிலிருந்து ஒரு பங்கு நதிநீர் புதுக்குளம், பிரண்டைக் குளம், புளியங்குளம் உள்ளிட்ட சங்கிலி தொடர் கண்மாய்கள் மூலம் பல நுாறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கண்முன்னே ஆற்றில் ஆக்கிரமித்து கால்நடை தீவனம் வளர்ப்பதால் கண்மாய்க்கான வரத்து தடை படுகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து பொன் குரு, நீர்வளத்துறை உதவி பொறியாளர்: நவ. மாதம் விருதுநகர் வந்த தமிழக முதல்வர் பிரதான கால்வாய்களை துார்வார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதற்காக நீர்வளத்துறை அனுமதி பெற்று டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.