உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாத்தால் வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கில் வலியுறுத்தல்

மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாத்தால் வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கில் வலியுறுத்தல்

ராஜபாளையம் ; மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாத்தால் வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெறும் என ராஜபாளையத்தில் நடந்த சுற்றுச்சூழல் கருத்தரங்கில் வன ஆர்வலர்கள் பேசினர். ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம்வனத்துறை, ராம்கோ கம்யூனிட்டி சர்வீசஸ், வார் அமைப்பு, இந்திய வன அறக்கட்டளை சார்பில் மேற்கு தொடர்ச்சி மலையும், மேகமலையும் என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது.ராம்கோ கம்யூனிட்டி சர்வீசஸ் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணிய ராஜா வரவேற்றார். தலைமை செயல்பாட்டு அதிகாரி கிரிதரன் வாழ்த்தினார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசினார். மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் முன்னிலை வகித்து பேசினார். கிரீன் ப்யூச்சர் பவுண்டேசன் இயக்குனரான ஜஸ்டஸ் ஜோஸ்வா பேசியதாவது:மேற்கு தொடர்ச்சி மலை குஜராத்தில் துவங்கி, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு வரை செல்கிறது. இந்தியாவின் பரப்பில் 5 சதவீதம் உள்ளது.இதில் 51வது புலிகள் சரணாலயமாக ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 149 வண்ணத்து பூச்சி வகைகளும், 252 பறவை வகைகளும், 63 பாலுாட்டி வகைகளும், 109 ஊர்வன வகைகளும், 44 நில, நீர் வாழ்வனவும் உள்ளன. விலங்குகள் நம்மை விட நுண்ணுணர்வு கொண்டவை. அவை ஒரு போதும் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தியது இல்லை. இயற்கையை பாதுகாக்க தான் செய்யும். அதே போல் மனிதர்களான நாமும் மலையை பாதுகாக்க வேண்டும். இந்த இடத்தின் முக்கியத்துவத்தை அறிந்து நாம் செயல்பட வேண்டும், என்றார். சிவகங்கை பசுமை குழு உறுப்பினர் மணிவண்ணன் பேசியதாவது: மேற்கு தொடர்ச்சி மலை நமக்கு பல வற்றாத ஜீவ நதிகளை தருகிறது. இன்று மதுரையின் வைகையும், விருதுநகர் மாவட்டத்தின் வைப்பாறும் வறண்டு காணப்படுகின்றன. நீர்நிலைகளை காக்க மேற்கு தொடர்ச்சி மலை அவசியம்.இதை பாதுகாத்தால் வைகை, வைப்பாறு நதிகள் புத்துயிர் பெற்று 5 மாவட்டங்களுக்கான குடிநீர் தேவை பூர்த்தி ஆகும், என்றார். மதுரை பறவைகள் ஆர்வலர் டாக்டர் பத்ரி நாராயணன் மரங்களுக்கும் பறவைகளுக்கான உறவு பற்றியும், வன உயிரின பேராசிரியர் ராமகிருஷ்ணன் யானைகள் பற்றி பேசினர். ஏற்பாடு ராம்கோ பொறியியல் கல்லுாரி நிர்வாகம் செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ