உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசாணை வெளியிட்டு 10 மாதமாகியும் காட்டுப்பன்றி பிரச்னைக்கு தீர்வு இல்லை; புலம்பும் விவசாயிகள் 

அரசாணை வெளியிட்டு 10 மாதமாகியும் காட்டுப்பன்றி பிரச்னைக்கு தீர்வு இல்லை; புலம்பும் விவசாயிகள் 

விருதுநகர்; தமிழகத்தில் காட்டுப்பன்றியை சுடும் அரசாணை வெளியிட்டு 10 மாதங்கள் ஆகியும் செயல்படுத்தாததால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். விளை நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் அவற்றை சுட்டு பிடிக்க விவசாயிகள் அனுமதி கோரினர். 2025 ஜன. 11ல் சட்டசபை கூட்டத்தில், காட்டுப்பன்றிகள் காப்பு காடுகளில் இருந்து 3 கி.மீ., தொலைவை தாண்டி வந்தால் வனத்துறையினர் சுடலாம் என அரசு அறிவித்தது. இவற்றை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கி, விவசாயிகளே சுட்டுப்பிடிக்க அனுமதி கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். காட்டுப்பன்றியால் சேதம் குறித்த புகாரை பெற வி.ஏ.ஓ., உள்ளாட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கி ஊரகக் குழுக்களும், வட்டார அளவில் தாசில்தார்களை உள்ளடக்கியும், மாவட்ட அளவில் கலெக்டர், மாவட்ட வன அலுவலர்களை உள்ளடக்கியும் குழுக்கள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது. பல மாவட்டங்களில் குழு அமைக்கப்படவில்லை. அமைக்கப்பட்ட மாவட்டங்களில் அக்குழுக்கள் செயல்பாடின்றி உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்குள் புகும் அளவிற்கு காட்டுப்பன்றிகளின் கொட்டம் அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களில் குடியிருப்பில் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. அரசாணையின் படி காட்டுப்பன்றியை சுடுவது சாதாரண காரியமல்ல. மேலும் இரவு நேரங்களில் தான் காட்டுப்பன்றிகள் பயிர்களை சூறையாடுகின்றன. வனத்துறையின் ஆள் பற்றாக்குறையால் இது சாத்தியமாகாது என விவசாயிகள் அப்போதே அதிருப்தி தெரிவித்தனர். கண்துடைப்பாக அரசாணை வெளியிட்டு 10 மாதங்களை கடந்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை. வரும் நாட்களில் நடவு பணிகள் வேகமெடுக்கும். மீண்டும் காட்டுப்பன்றிகள் தாக்கினால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைவர். சட்டசபை தேர்தலில் முழு கவனமும் சென்று விட்டால் அரசு இந்த அரசாணையை முழுவீச்சில் செயல்படுத்துவது கேள்விக்குறி தான் என விவசாயிகள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ