| ADDED : ஜூன் 15, 2024 07:11 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் நீட் பயிற்சியை தீவிரப்படுத்தவும், இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்வதை அதிகப்படுத்தவும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதிகளவில் மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் இந்தாண்டு துவக்கம் முதலே மாணவர்களுக்கான பயிற்சியை தீவிரப்படுத்த தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஏழ்மையான சூழ்நிலையில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்றால் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்விக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தாண்டு பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கிடைக்கும் அளவுக்கு பலர் மதிப்பெண் பெறவில்லை. இது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.மாவட்ட நிர்வாகம் முன்பிருந்தே நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண்கள் பெரிய அளவில் சாதனை எட்டவில்லை. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பலர் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், அவர்களும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்குள் வருவதில்லை.இந்நிலையில் நீட் பயிற்சி பெற விருப்பமுள்ள மாணவர்களுக்கு புதிய மெட்டீரியல்களை அளித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வட்டார வாரியாக மாணவர்களை தேர்வு செய்து அவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதில் உள்ள சிக்கல்களை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும். மாணவர்களுக்கு நீட் சாதனை மாணவர்கள், டாக்டர்கள் மூலம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தி உத்வேக பேச்சுக்களை கேட்க ஏற்பாடு வேண்டும். தேர்வில் அதிக மதிப்பெண் பெற தேவையான நுணுக்கங்களையும், வெற்றி வழிகாட்டிகளையும் மாணவர்களுக்கு தருவது அவசியமாகிறது. இது மட்டுமே வரும் காலங்களில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் இட ஒதுக்கீடு மூலம் கல்வி பெறுவதை உறுதி செய்யும். மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.