உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பரளச்சி - கஞ்சம்பட்டி ஓடை உடைப்பை நிரந்தரமாக செப்பனிட எதிர்பார்ப்பு

பரளச்சி - கஞ்சம்பட்டி ஓடை உடைப்பை நிரந்தரமாக செப்பனிட எதிர்பார்ப்பு

திருச்சுழி: திருச்சுழி அருகே பரளச்சி - கஞ்சம்பட்டி பிரதான ஓடை உடைப்பை நிரந்தரமாக செப்பனிட வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அருப்புக்கோட்டை காந்தி நகர் - பந்தல்குடி செல்லும் நான்கு வழிச்சாலை காட்டுப் பகுதிகளில் பெய்யும் மழை நீர் சிறிய ஓடைகள் வழியாக திருச்சுழி எம்.ரெட்டியபட்டி அருகே மறவர் பெருங்குடி வழியாக கஞ்சம்பட்டி கண்மாயில் நிறையும்.பின் 2 ஓடைகளாக பிரிந்து பரளச்சி, மேலையூர் கண்மாயில் சேர்ந்து, அங்கிருந்து செங்குளம், பூலாங்கால் உள்ளிட்ட கண்மாய்கள் பெருகி, பெருநாழி கண்மாயை சென்றடைந்து, பிரிந்து பல கண்மாய்களுக்கு செல்லும். கஞ்சம்பட்டி - பரளச்சி பிரதான ஓடை பலமான கரைகளை உடையது. பராமரிப்பு இன்றி போனதால், மழை காலங்களில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்களில் புகுந்து விடுகிறது. மேலும், இந்த பகுதியில் உள்ள கண்மாயை தூர்வாராமல், பிரதான ஓடையை 2 ஆக பிரித்து, கரை அமைத்து தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தி விட்டனர். ஒரு வழியில் சீமைகருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதை வெட்டாமல் விட்டு விட்டனர். மழை காலங்களில் வெள்ளம் ஓடையில் சீராக செல்ல முடியாமல், உடைப்பு ஏற்பட்டது. பொதுபணித்துறையினர் முறையாக உடைப்பை தற்காலிகமாக அடைத்தனர்.சமீபத்தில் பெய்த கனமழையில் மீண்டும் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, 30 கிராமங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. விளை நிலங்களில் வெள்ளம் சூழ்ந்தது. எனவே பரளச்சி - கஞ்சம்பட்டி பிரதான ஓடையின் கரையை உயர்த்தியும், சீமை கருவேல மரங்களை அகற்றியும் தண்ணீர் சீராக செல்ல பொது பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து, காவிரி, குண்டாறு, வைகை பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர் ராம்பாண்டியன்: பரளச்சி - கஞ்சப்பட்டி பிரதான ஓடை அந்தப் பகுதியிலுள்ள பல கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் முக்கியமான நீர்வழிப் பாதை. இதை முறையாக பராமரித்து தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்காவிடில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு விவசாய பாதிப்பு, கால்நடைகள், வீடுகள் இழப்பு, உயிர் சேதம் போன்ற இழப்புகளை சந்திக்க நேரிடும். ஓடையில் தடுப்பு சுவரும், இரு பக்கமும் விவசாயிகள் சென்று வர, மங்கம்மாள் ரோடு வழியாக பாலம் அமைக்க வேண்டும். 2 மாவட்டங்களில் உள்ள 7 கண்மாய்கள், 50 கி.மீ., சுற்றளவில் கண்மாய்களின் நீர் ஆதாரம், குடிநீர், விவசாயம் போன்றவைகளுக்கு இந்த பிரதான ஓடையை நம்பித்தான் இருக்க வேண்டியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை