நரிக்குடி, காரியாபட்டி பகுதியில் கோயில்களை புனரமைக்க எதிர்பார்ப்பு
நரிக்குடி: நரிக்குடி, காரியாபட்டி பகுதியில் சேதமடைந்து வரும் பழமையான கோயில்களை புனரமைக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். நரிக்குடி, காரியாபட்டி பகுதிகளில் ஏராளமான சிவன், பெருமாள் கோயில்கள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பெரும்பாலான ஆலயங்கள் ஆங்காங்கே சிதலமடைந்துள்ளன. குறிப்பாக முடுக்கன்குளம், ஆவியூர், சூரனூர், பாப்பனம், அழகியநல்லூர் சத்திரம், நரிக்குடி சிவன் கோயில், மறையூர் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புனரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இக்கோயில்கள் பெரும்பாலும், ஹிந்து சமய அறநிலையத்துறை, ராமநாதபுரம், சிவகங்கை சமஸ்தானங்களுக்கு பாத்தியப்பட்டதாக உள்ளது. அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் ஏற்படும் போது புழுக்கம் தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அப்படியே விட்டு விட்டால் பெரும்பாலான கோயில்கள் உள்ள சிலைகள், கற்கள் காணாமல் போகும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சிதிலமடைந்து வரும் கோயில்களை புனரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.