உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உணவு பாதுகாப்பு உரிமம்  இல்லாத ஆலை கேன்டீன்கள் இயங்க தடை

உணவு பாதுகாப்பு உரிமம்  இல்லாத ஆலை கேன்டீன்கள் இயங்க தடை

விருதுநகர்: சாத்துாரில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத சிமென்ட் ஆலை கேன்டீன்கள் மூடப்பட்டது. 125 கிலோ லேபிள் விவரங்கள் இல்லாத உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சாத்துாரில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் சாத்துார் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் அம்ஜத் இப்ராஹிம் கான் அடங்கிய அலுவலர் குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர். இதில் உப்பத்துார் பிரிவு அருகே திருப்பதி டீ ஸ்டால் கடையின்உரிமையாளர் ராமர், தடை புகையிலை பொருட்களை விற்பது தெரிந்த நிலையில் கடை சீல் வைக்கப்பட்டது. அருகில் இருந்த சிமென்ட் ஆலையில் உள்ள கேன்டீன்களை ஆய்வு செய்த போது 2 கிலோ கலர் அப்பளமும், 125 கிலோ லேபிள் விவரங்கள் இல்லாத நாட்டுச்சக்கரை உள்ளிட்ட மளிகைப் பொருட்களும் கண்டறியப்பட்டு, பறி முதல் செய்யப்பட்டது. ஆலை வளாகத்தில் இருந்த 2 கேன்டீன்களுக்கும் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததால் இயக்க நிறுத்த ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து சாத்துார் பஸ் ஸ்டாண்டில் எதிரே ஓட்டலில் நடத்திய ஆய்வில் உரிய வெப்பநிலையில் பராமரிக்கப்படாத 24 கிலோ உறைநிலை சிக்கன், ஒருகிலோ பழைய சப்பாத்தி மாவு, அரைகிலோ சப்பாத்தி பறிமுதல் செய்யப்பட்டுஅழிக்கப்பட்டது. ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு பதியப்படும் என உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !