சேதமான கால்வாய்,மதகுகள், பலவீனமான கரைகள் வேதனையில் மேலமடை கண்மாய் விவசாயிகள்
சாத்துார்: சேதமான கால்வாய், மதகுகள், பலவீமான கரைகள், முள் செடிகள் ஆக்கிரமிப்பு போன்றவற்றால் சாத்துார் மேலமடை கண்மாய் பாசன விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி கே. மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது மேலமடை பெரிய கண்மாய் . இந்தக் கண்மாய் நிறைந்தால் இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, கே .மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம் நடைபெறும். இந்த கண்மாயில் 6 மதகுகள் உள்ளன. ஒவ்வொரு மதகிலிருந்தும் திறந்து விடப்படும் தண்ணீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த கால்வாய் பல இடங்களில் உடைந்து உள்ளது. கடந்த ஆண்டு கண்மாய் மிகவும் தாமதமாக நிரம்பியதால் இந்த பகுதி மக்கள் மிகக் குறைந்த அளவே விவசாயம் செய்தனர். இந்த வருடம் பருவ மழை பெய்ய துவங்கி உள்ளதால் கண்மாய் நிரம்பும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உழவுப் பணிகளை செய்து வருகின்றனர்.