உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உலர்களங்கள் இல்லாததால் விவசாயிகள்; தவிப்பு l அறுவடை பயிரை பிரித்தெடுக்க சிரமம்

உலர்களங்கள் இல்லாததால் விவசாயிகள்; தவிப்பு l அறுவடை பயிரை பிரித்தெடுக்க சிரமம்

மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. போதுமான வேலை ஆட்கள் கிடைக்காததால் பருத்தி, மல்லி, ஓமம் உள்ளிட்ட விவசாயத்தை விவசாயிகள் குறைத்துக் கொண்டனர். செலவு, ஆட்கள் குறைவு என்பதால் எள், துவரை, சோளம், கம்பு உள்ளிட்டவைகளை பயிரிடுகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் தானியங்களை பிரித்தெடுக்க காடுகளில் களம் அமைத்து மாடுகளை விட்டு மிதித்து பிரித்தெடுத்தனர்.அப்போது விவசாயிகள் காளை, பசு, எருமை மாடுகள் அதிகம் வளர்த்தனர். பால் கறந்து விற்பனை செய்தும், விவசாய நேரத்தில் தானியங்களை பிரித்தெடுக்கவும், கிடை அமர்த்தியும் வருவாய் ஈட்டினர். விவசாயம் செழிப்பாக இருந்தது. அதற்கு பின் தானியங்களை பிரித்தெடுக்க டிராக்டர் பயன்படுத்தினர்.ஒரு சில ஊர்களில் அரசு உலர் சிமென்ட் களம் அமைத்தது. குறைந்த செலவில் பாதுகாப்பாக தானியங்களை பிரித்தெடுக்க முடிந்தது. நாளடைவில் மழை பொழிவு குறைந்தது. விவசாயத்திற்கு போதிய ஆட்கள் கிடைக்கவில்லை. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பலர் தரிசு நிலங்களாக போட்டுள்ளனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் விவசாயத்தை விட முடியாமல் சிலர் மட்டுமே தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான களம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ஏற்கனவே இருந்த உலர் சிமென்ட் களமும் சேதமடைந்தது. மாடுகள் வளர்ப்பு இல்லை. டிராக்டர் கொண்டு பிரித்தெடுக்க அதிக செலவு உள்ளிட்ட காரணங்களால் மாற்று வழிமுறைகளை தேடினர். அதிக வாகனங்கள் செல்லும் முக்கிய ரோடுகளில் போட்டு தானியங்களை பிரித்தெடுத்து வருகின்றனர். ஆபத்தான சூழ்நிலை இருந்து வருகிறது. வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் செல்கின்றனர். துவரை உள்ளிட்ட பயிர்களை கட்டுக்கட்டாக போடுவதால் சிறிய ரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இது போன்ற சூழ்நிலையை தவிர்க்க கிராமங்களில் தரமான உலர் சிமென்ட் களம் அமைக்க வேண்டும். சேதமடைந்துள்ள களங்களை சீரமைக்க வேண்டும். வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் செல்வதால், ரோட்டில் போடுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !