புழக்கத்திற்கு தண்ணீர் இல்லை திண்டாடும் பெண் அரசு ஊழியர்கள்
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர்அலுவலக வளாகம் பள்ளிக்கல்வித்துறை அலுவலக கட்டடத்தில் புழக்கத்திற்கு தண்ணீர் இல்லை. பெண் அரசு ஊழியர்கள் திண்டாடினர்.விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலகங்கள் அனைத்தும் விரைவில் இங்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளன. அதே போல் பள்ளிக்கல்வித்துறை அலுவலக கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அங்குள்ள கட்டடங்களும் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.இந்நிலையில் புதிய கலெக்டர் அலுவலகத்தில்இடமாற்ற பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகின்றன. பள்ளிக்கல்வித்துறை அலுவலக கட்டடத்தின் மேல்நிலை சிமென்ட் குடிநீர் தொட்டியில் இரும்பு குழாய் துருப்பிடித்து சேதமாகி உள்ளதால், மோட்டார் மூலம் ஏற்றும் நீர் வீணாகிறது. தொட்டியும் நிரம்பாமல் உள்ளது. இதனால் புழக்கத்திற்கு கூட கட்டடம் முழுவதும் தண்ணீர் இல்லை. சாப்பிட்டால் கை கழுவுவதற்கும், கழிப்பிடம் உள்ளிட்ட இதர பயன்பாட்டிற்கும் பழைய கலெக்டர் அலுவலகம் வரை சென்றுவருகின்றனர்.இதில் பெண் ஊழியர்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். மூன்று மாடி கட்டடங்கள் உள்ள இந்த கட்டடத்தில் சுத்தமாக தண்ணீர் புழக்கத்தில் இல்லாததால் கூட்டுறவுத்துறையினர், சுகாதாரத்துறையினர், பள்ளிக்கல்வித்துறையினர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பழைய கட்டடம் என்பதால் வீணாகும் தண்ணீர் சிமென்ட் பூச்சுக்களை மேலும் பலவீனமாக்குகிறது. இரும்புக்குழாயை சரி செய்து இதற்கு தீர்வு காண வேண்டும். விரைவில் சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். புழக்கத்திற்கான தண்ணீர் பிரச்னையை சரிசெய்ய வேண்டும்.