கழுகாசலமூர்த்தி கோயிலில் மலர் காவடி; பக்தர்கள் பங்கேற்பு
சாத்துார்; துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் நேற்று மலர் காவடி திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மலர் காவடி சுமந்து வந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்தனர்.துாத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோயில் பழமையான குடவரைக்கோயில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் மலர் காவடி திருவிழா நடைபெற்று வருகிறது.நேற்று நடந்த மலர் காவடி திருவிழாவில் சிவகாசி, கோவில்பட்டி, நாலாட்டின்புத்துார், கழுகுமலை, திருவேங்கடம், சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு மலர் காவடி சுமந்தபடி கிரிவலம் வந்தனர்.பின்னர் சுவாமிக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. அன்னதானம் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மடாதிபதி ஆதீனங்கள் கலந்து கொண்டு ஆன்மிக உரையாற்றினர். முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.