தி.மு.க., ஆட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு
விருதுநகர்: தி.மு.க., ஆட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக விருதுநகரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.விருதுநகரில் நடந்த அ.தி.மு.க., கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:நம் தோல்வியை பற்றி விமர்சிக்க தி.மு.க.,வுக்கு என்ன அருகதை உள்ளது. தி.மு.க., பார்க்காத தோல்வியா. 13 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இல்லாமல் போன தி.மு.க., இன்று ஆட்சியில் இல்லையா. நாமும் 2026ல் மீண்டும் அரியணை ஏறுவோம். பொய் பேசுவதும், எடுத்தோம், கவுத்தோம் என பேசுவதும் தி.மு.க., பாணி, என்றார்.கழக அமைப்பு செயலாளர் செம்மலை பேசியதாவது: 2011ல் 7 தொகுதியில் 6 தொகுதிகளை வென்ற மாவட்டம் விருதுநகர். உறுப்பினர் சேர்க்கையிலும் விருதுநகர் மேற்கு மாவட்டம் முதன்மையாக உள்ளது. நம் இலக்கு 2026 சட்டசபை தேர்தல். அதன் நோக்கம் நம் பொதுச்செயலாளர் பழனிசாமி முதல்வராக வேண்டும். அவர் முதல்வரானால் தொண்டர்களுக்கு சக்தியாக இருப்பார். அவருக்கு பட்டாபிஷேகம் நடத்த தயாராக இருங்கள், என்றார்.ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் என மேற்கு மாவட்டத்தின் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி செயலாளர்களிடம் அவர்கள் வழங்கிய உறுப்பினர் சீட்டு விவரம், அதில் பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்டவை விவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு நடந்து வரும் கட்சி பணிகள் குறித்து பேசினார்.முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் 80 செ.மீ., மழை பெய்தது. நாங்கள் சமாளித்து மக்களுக்கு தேவையானவற்றை செய்தோம். ஆனால் தி.மு.க., ஆட்சியில் குறைந்த அளவு பெய்த மழையால் மக்களை தவிக்க விட்டுள்ளனர். தி.மு.க., மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். நம் பொதுச்செயலார் பழனிசாமி சிலுவம்பாளையத்தில் படுத்து கொண்டே இருந்தால் கூட மக்கள் அவரை ஜெயிக்க வைத்து விடுவர். அந்தளவுக்கு ஆட்சி மீது நம்பிக்கை இழந்து விட்டனர். அவர் அரியணையில் ஏற பக்கபலமாக இருக்க வேண்டும், என்றார்.முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், ஒன்றிய செயலாளர் மச்சராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.