உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டி - நரிக்குடி ரோட்டில் வளைவால் அடிக்கடி நடக்கும் விபத்து

காரியாபட்டி - நரிக்குடி ரோட்டில் வளைவால் அடிக்கடி நடக்கும் விபத்து

காரியாபட்டி: காரியாபட்டி - நரிக்குடி ரோட்டில் வளைவுகளில் வாகனங்கள் திரும்ப முடியாமல் அடிக்கடி விபத்து நடக்கிறது. ரோட்டை நேர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டி - நரிக்குடி வழித்தடத்தில் சத்திரபுளியங்குளம், முடுக்கன்குளம், எஸ்.மறைக்குளம், பனைக்குடி உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. இப்பகுதியில் எப்போதும் இருபோகம் விவசாயம் நடைபெறும். பல்வேறு சிறு, குறு தொழில்கள் நடக்கின்றன. அதிக அளவில் மக்கள் நடமாட்டம் இருக்கும். ராமநாதபுரம், பார்த்திபனுார், ராமேஸ்வரம் உள்ளிட்ட ஊர்களுக்கு இந்த வழித்தடம் அருகாமை என்பதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில் இரு வாகனங்கள் விலகும் அளவிற்கு மட்டுமே ரோடு உள்ளது. பக்கவாட்டில் களிமண்ணாக இருப்பதால் நின்று நிதானமாக விலகிச் செல்ல வேண்டும். சற்று வேகமாக விலகிச் செல்ல முற்பட்டால் விபத்து ஏற்படும் மேலும் இந்த வழித்தடத்தில் ஏராளமான வளைவுகள் உள்ளன. இது ஒரு புறம் இருக்க, தேனூர் அருகே கொண்டை ஊசி வளைவு உள்ளது. கவனக்குறைவாகவோ, அதிவேகமாகவோ வரும் வாகனங்கள் திருப்ப முடியாமல் விபத்தில் சிக்குகின்றனர். ஏராளமான உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து எச்சரிக்கை பலகை, இரும்பு தடுப்பு போடப்பட்டது. அப்படி இருந்தும் ஏராளமான வாகனங்கள் தடுப்பில் மோதி விபத்தில் சிக்குகின்றன. அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். நீண்ட வாகனங்கள் திரும்புவதில் சிக்கல் உள்ளது. எனவே வாகனங்கள் எளிதாக திரும்பவும் இந்த ரோட்டை நேர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !