சம்பா வத்தலுக்கு புவிசார் குறியீடு போதாது
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் சம்பா வத்தலுக்கு புவிசார் குறியீடு வழங்கி மத்திய அரசும், தமிழக அரசும் பெருமைப்படுத்தினாலும் விவசாயிகள் இதை ரசிக்கும் நிலையில் இல்லை. ஒவ்வொரு மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்டு தனித்துவமாக விளங்கும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் விருதுநகர் சம்பா வத்தலுக்கு இந்த முறை புவிசார் குறியீடு வழங்கி மத்திய, மாநில அரசுகள் பெருமைப்படுத்தியுள்ளன. இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் மிளகாய் பயிரிடும் விவசாயிகள், வத்தல் வியாபாரிகள் உலக அளவில் தங்கள் பொருளை விஸ்தரிக்க முடியும்.இது ஒரு சிறப்பு அம்சம் என்றாலும் மறுபுறம் மிளகாய் பயிரிடும் விவசாயிகளின் வாழ்க்கை சிறப்பானதாக இல்லை. இன்றைய சூழலில் விவசாயம் பயிரிடக்கூடிய விவசாயிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு பம்ப் செட் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் மிளகாய் பயிரை தான் முதன்மை பயிராக பயிரிடுவர். ஆனால் சில ஆண்டுகளாக மிளகாய் விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது.ஒரு ஏக்கரில் மிளகாய் சராசரியாக 7 முதல் 8 குவிண்டால் வரை கிடைக்கும். மிளகாய் பலன் தர 6 மாதங்கள் ஆகும். ஒரு முறை களை எடுப்பதற்கு 12 ஆயிரம் செலவு ஆகும். உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. ஒரு குவிண்டாலுக்கு ரூ.20 ஆயிரம் தான் விலை போகிறது. மிளகாய் சாகுபடியில் தொடர்ந்து விவசாய பணி இருந்து கொண்டே இருக்கும் செடியிலிருந்து பழம் எடுத்து அதை காய வைத்து மார்க்கெட் கொண்டு செல்லும் வரையிலும் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் செலவாகும்.வரவை விட செலவு அதிகமாக இருப்பதால், விவசாயிகள் மிளகாய் பயிரிடுவதை குறைத்துக் கொண்டே வருகின்றனர். இந்த நேரத்தில் புவிசார் குறியீடு கிடைத்ததற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை ரசிக்க முடியவில்லை என்கின்றனர் விவசாயிகள்.இது குறித்து காவேரி, குண்டாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராம்பாண்டியன்: அரசு மிளகாய் விவசாயிகளுக்கு சந்தை ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடையில் மக்களுக்கு மானிய விலையில் பொருட்கள் கொடுப்பது போல் மிளகாய் வத்தலையும் சேர்த்து வழங்க வேண்டும்.உரம், பூச்சிமருந்து, விதைகள் தரமானதாக மானிய விலையில் தங்கு தடையின்றி கிடைக்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற பல விஷயங்களை அரசு முன்னெடுத்தால் தான் மிளகாய் விவசாயம் பிழைக்கும். புவிசார் குறியீடு வழங்கியதற்கும் அர்த்தமாக இருக்கும்.