ஜவுளி பூங்கா இடத்தில் கிராவல்மண் திருட்டா; 12 லாரிகள் பறிமுதல்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் ஜவுளி பூங்கா அமையவுள்ள இடத்திற்கு அருகே உள்ள பெரியகுளம் கண்மாயில் சட்டவிரோதமாக கிராவல் மணல் திருட்டில் ஈடுபட்ட 12 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இ.குமாரலிங்கபுரத்தில் 1052 ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைகிறது. இதற்கான திட்ட அலுவலக கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டன. இந்நிலையில் ஜவுளி பூங்காவில் நில எடுப்பிற்குள் பட்டாசு ஆலை வருகிறது.இந்த பட்டாசு ஆலையினுள் உள்ளே உள்ள மரங்களை மர்மநபர்கள் வெட்டினர். இது குறித்து 2024 டிசம்பரில் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதால் வெட்டுவது நிறுத்தப்பட்டது.இந்நிலையில் தற்போது ஜவுளி பூங்கா நில எடுப்பு செய்யப்பட்ட பகுதி அருகே உள்ள பெரியகுளம் கண்மாயில் சிலர் பொதுப்பணித்துறை அனுமதி பெற்று மண் அள்ளி வருகின்றனர். இது குறித்து கேட்டால் ஆவணங்கள் உள்ளதாக கூறுகின்றனர்.ஆனால் வரைபடம் எதுவும் இல்லாததால் கிராவல் மண் அள்ளும் பகுதி ஜவுளி பூங்காவிற்காக எடுக்கப்பட்ட நிலமா என்ற சந்தேகம் உண்டானது.இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் சாத்துார் வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த சிவரஞ்சனி, வண்டல் மண் அள்ளுவதற்காக 30 நாட்களுக்கு நடைசீட்டு பெற்றுள்ளார். ஆனால் அரசு உரிமம் இன்றி கிராவல் மண்ணை ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் 12 லாரிகளில் திருடியதை போலீசார் கண்டறிந்தனர். இதில் டிப்பர் லாரியை கிராவல் மண்ணுடன் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.