மேலும் செய்திகள்
மகிழ்ச்சியில் கடலை விவசாயிகள்
28-Oct-2024
காரியாபட்டி : காரியாபட்டி பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் கடலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காரியாபட்டி எஸ்.மறைகுளம், தேனூர், உவர்குளம், சூரனூர், சித்தனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயம் அதிக அளவில் நடைபெறும். இப்பகுதியில் இரு போகம் விவசாயம் செய்து வருகின்றனர். காலத்தில் கடலை, பருத்தி, வெங்காயம், துவரை, பாசி பயிறு வகைகள் அதிக அளவில் பயிரிடுவர். கோடையில் வெங்காயம் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.நீர் நிலைகளில் ஓரளவிற்கு தண்ணீர் வந்துள்ளது. வயல்களில் நெல் நடவை முடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மானாவாரி நிலங்களில் நல்ல ஈரப்பதம் இருந்ததால் நிலக் கடலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.தனக்குமார், விவசாயி, எஸ். மறைக்குளம்: இப்பகுதியில் அதிக அளவில் மானாவாரியாக நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடலை செடிகள் நன்கு முளைத்துள்ளன. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் விளைச்சல் நன்றாக இருக்கும். இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருக்கும் என்கிற நம்பிக்கையில் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர் என்றார்.
28-Oct-2024