உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  விருதுநகரில் நேற்று மாலை கனமழை பிளவக்கல்லில் 40.80 மி.மீ., மழை

 விருதுநகரில் நேற்று மாலை கனமழை பிளவக்கல்லில் 40.80 மி.மீ., மழை

விருதுநகர்: விருதுநகரில் கடந்த சில நாட்களாக அதிகாலை துவங்கி மதியம் வரை குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நீடித்தாலும் பரவலகா மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக பிளவக்கல்லில் 40.80 மி.மீ., மழையளவு பதிவானது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகாலை முதல் பனிமேகங்கள் அதிகமாக இருப்பதால் குளிர்ச்சியான காலநிலை நீடிக்கிறது. இதனால் மதியம் வரை சீதோஷ்ண நிலை நன்றாக இருப்பதால் பலரும் சிரமமின்றி வந்து செல்கின்றனர். விருதுநகரில் நேற்று காலை முதல் சாரல் மழை பரவலாக பெய்தது. ஆனால் மாலை 5:30 மணி முதல் தொடர்ந்து இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பாண்டியன் நகர், லட்சுமி நகர், பர்மா காலனி, பழைய பஸ் ஸ்டாண்ட் உள்பட நகரின் பல பகுதிகள், அதனை சுற்றிய புறநகர் பகுதிகளில் ரோடுகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சாத்துார், சுற்றுக் கிராமங்களில் நேற்று காலை முதல் மாலை வரை விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. அண்ணா நகர், குருலிங்கபுரம் பகுதியில் நேற்று மதியம் 2:30 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. இரண்டரை மணி நேரத்தும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டது. மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே உயர் அழுத்த மின்கம்பியில் உரசும் மரக்கிளைகளை வெட்டி அகற்றி இருந்தால் இதுபோன்று மின்வெட்டு ஏற்பட்டு இருக்காது என பகுதி மக்கள் கூறினர். நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி திருச்சுழியில் 3 மி.மீ., காரியாபட்டி 9.10, விருதுநகர் 5.80, சாத்துார் 7.50, அருப்புக்கோட்டையில் 10 மி.மீ., மழையளவு பதிவானது. மேலும் ராஜபாளையத்தில் 18 மி.மீ., ஸ்ரீவில்லிப்புத்துார் 28, சிவகாசி 16, வத்திராயிருப்பு 37.40, கோவிலான்குளம் 11.60, வெம்பக்கோட்டை 15.60 மி.மீ., மழையளவு பதிவாகியது. அதிக பட்சமாக பிளவக்கல்லில் 40.80 மி.மீ., பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி