மேலும் செய்திகள்
பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம்
18-Sep-2025
சாத்துார் : சாத்துார் படந்தால் ஊராட்சி மருதுபாண்டியர் நகரில் சாலை ஓரத்தை மக்கள் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்துவதாலும் சேதமடைந்த சாலையாலும் மக்கள் அவதிப்படுகின்றனர். படந்தால் மருது பாண்டியர் நகர் குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள் சி. கணேசன், டி.எஸ். அய்யப்பன், கார்த்திக், எஸ். சரவணன் வி. சுப்புராஜ், வி. பி. ஜெய் கணேஷ் ஆகியோர் கலந்துரையாடியதவாது: நடுத்தெருவில் மட்டும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டதால் ஆங்காங்கே ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வைப்பாற்றில் நேரடியாக கலப்பதால் ஆற்றில் கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதியில் உள்ள போர்வெல் தண்ணீர் பாதித்து கருமையாகவும் மிகவும் உப்பாகவும் உள்ளது. ஆற்றில் நகராட்சிக்கும் ஊராட்சிக்கும் என தனித்தனியாக உறை கிணறுகள் உள்ளன. தற்போது கழிவுநீர் தேங்கி நிற்பதால் இந்த உறை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் தன்மையும் பாதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உடல் நலம் பாதித்து நோய் வாய் படுகின்றனர். ஆற்றுப்பகுதியில் குப்பை கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகையால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர். மருதுபாண்டியர் நகர் பகுதியில் வசிக்கும் பலரும் வைப்பாற்று கரையில் அமைந்துள்ள சாலை வழியாக வேலைக்கும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் செல்கின்றனர். இவ்வழியாக செல்லும் மாணவர்களும் மக்களும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். நகர் அருகில் உள்ள ஆற்றில் காடு போல முள்செடிகள் வளர்ந்துள்ளன. இவற்றில் இருந்து இரவு நேரத்தில் விஷப்பூச்சிகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுக்கின்றன. எனவே முள் செடியை அகற்ற வேண்டும். திறந்தவெளி கழிப்பறையை ஒழிப்பதற்காக ஊராட்சியில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் மக்கள் இந்த பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத வகையில் பூட்டு போட்டு பூட்டியுள்ளனர்.இதனால் ரோட்டின் ஓரங்களை மக்கள் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். குடியிருப்பு அருகில் குப்பை கொட்டுவதையும் தீ வைத்து எரிப்பதை தடுக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். என அவர்கள் கலந்துரையாடினர்.
18-Sep-2025