உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மரத்தில் ஆணிகள் அடித்து பதாகைகள் வைப்பதால்...பாதிப்பு:பட்டுப் போவதை தடுக்க நடவடிக்கை அவசியம்

மரத்தில் ஆணிகள் அடித்து பதாகைகள் வைப்பதால்...பாதிப்பு:பட்டுப் போவதை தடுக்க நடவடிக்கை அவசியம்

காரியாபட்டி:மாவட்டத்தில், ரோட்டோரங்களில் வளர்ந்துள்ள மரங்களில் ஆணிகள்அடித்து பதாகைகள் தொங்கவிடுவது, கேபிள் வயர்களை கம்பி போட்டு கட்டி வைப்பது என சேதப்படுத்துவதால் நோய்வாய்ப்பட்டு பட்டுப் போகின்றன. இதனை கண்காணித்து தடுக்க வேண்டியதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது பசுமை குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.பெருகிவரும் தனியார் நிறுவனங்கள் மக்களிடத்தில் சந்தைப்படுத்த போட்டி போட்டு விளம்பரங்கள் செய்கின்றன. பொது இடங்களில் விளம்பர பலகைகள், பதாகைகள் வைக்கக்கூடாது என்கிற விதி இருப்பதால், தனியார் இடங்களை வாடகைக்கு பிடித்து வைக்கின்றனர். இது அனைவராலும் செய்ய முடியாது என்பதால், குறைந்த செலவில் மக்கள் கண்ணில் எளிதில் படும் வகையில் விளம்பரங்களை வைக்க முற்படுகின்றனர். அதற்காக ரோட்டோரம் உள்ள மரங்களை தேர்வு செய்கின்றனர். இன்னும் ஒரு சில ரோட்டோரங்களில் மரங்கள் அடர்த்தியாக, பசுமையாக காணப்படுகின்றன. குறிப்பாக, விருதுநகர் -அழகாபுரி, கல்குறிச்சி - விருதுநகர், காரியாபட்டி - அருப்புக்கோட்டை, நரிக்குடி - பார்த்திபனூர் ரோடு என பல்வேறு இடங்களில் புளிய மரங்கள், புங்கை, பூவரசு உள்ளிட்ட மரங்கள் உள்ளன. ஒரு இடங்களை கூட விட்டு வைக்காமல் விளம்பர பதாகைகளை ஆணிகள் அடித்து தொங்க விடுகின்றனர். கேபிள் ஒயர்களை மரத்தில் கம்பிகளை வைத்து கட்டி வைக்கின்றனர். பெரும்பாலும் 50, 60 ஆண்டுகள் பழமையாக மரங்களே உள்ளன. இதில் விளம்பர பதாகைகளை ஆணி அடித்து தொங்க விடுவதால் சேதமாகி, பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு, ஓட்டை விழுகிறது. அதில் மழை நீர் சென்று, பாதிப்பை ஏற்படுத்தி மரங்களை பட்டுப் போக வைக்கிறது. ஏற்கனவே ரோட்டோரத்தில் இருந்த பெரும்பாலான மரங்களை ரோடு விரிவாக்கம், சரிவர பராமரிப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் காணாமல் போய், வெறிச்சோடி கிடக்கின்றன. அவ்வாறு இருக்கும்போது, ஒரு சில இடங்களில் இருக்கும் மரங்களிலும் ஆணி அடித்து விளம்பர பதாகைகளை தொங்கவிடுவது, கேபிள் ஒயர்களை கம்பிகள் கொண்டு கட்டு வைப்பது என நிறுவனங்கள் செய்வதால் மரங்கள் முற்றிலும் சேதமடைகிறது. இதனை கண்காணித்து தடுப்பது, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது என பசுமை குழுவினரின் செயல்பாடுகள் அவசியமாகிறது. மரங்களைச் சேதப்படுத்தி விளம்பர பதாகைகளை வைக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்