உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆற்றின் வழித்தடங்களில் கழிவுநீர், பிளாஸ்டிக் அதிகரிப்பு: மழை பெய்தால் அடித்து செல்லப்படுது அணைக்கு

ஆற்றின் வழித்தடங்களில் கழிவுநீர், பிளாஸ்டிக் அதிகரிப்பு: மழை பெய்தால் அடித்து செல்லப்படுது அணைக்கு

மாவட்டத்தின் நீர்நிலைகள் ஒரு தொடர்சங்கிலி போல அமைந்துள்ளன. ஆறு, கண்மாய், குளம், குட்டை என அடுத்தடுத்த பாசன தேவைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. அந்த வகையில் பிளவக்கல்லில் இருந்து வெளியேறும் நீரானது அர்ஜூனா நதியாக மாறி சிவகாசி வழியே வருகிறது. அதே போல் மதுரை மாவட்டம் மங்களரேவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் நீரானது, வடமலைக்குறிச்சி, விருதுநகர் வழியாக கவுசிகா நதியாக செல்கிறது.இது குல்லுார்சந்தை அணையில் கலக்கிறது. அதே போல் குல்லுார்சந்தையில் இருந்து வெளியேறும் நீரும், அர்ஜூனா நதியும் சேரும் இடத்தில் கோல்வார்பட்டி அணை உள்ளது. அங்கிருந்து வெளியேறும் நீரும், வைப்பாறு நீரும் சேரும் இடத்தில் இருக்கன்குடி அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பல்வேறு நதிக்கிளைகளில் இருந்து வெளியேறும் நீர், வெம்பக்கோட்டை அணையில் சேர்கிறது. அங்கிருந்து வெளியேறும் நீர் சாத்துார் வரை வைப்பாறாக ஓடுகிறது.இந்நிலையில் மாவட்டத்தில் தெளிந்த நீரோட்டம் உள்ள ஆறுகளாக ஸ்ரீவில்லிபுத்துாரில் பேயனாறு, ராஜபாளையத்தில் அய்யனார் ஆறு, சாஸ்தா கோவில் ஆறு ஆகியவை உள்ளன. அர்ஜூனா நதி, கவுசிகா நதி, வைப்பாறு போன்ற ஆறுகள் வறண்டும், பாசி, கழிவுநீர் தேங்கியும், பிளாஸ்டிக் குப்பை சூழ்ந்தும் உள்ளன.மாவட்டத்தில் முக்கிய பகுதியான சிவகாசி, விருதுநகர், சாத்துார் பகுதிகளில் தான் நீர்நிலைகளின் வறட்சி, கழிவுநீர் தேக்கம், குப்பை சூழல் போன்ற பிரச்னை உள்ளன. காரணம் நீரோட்டம் இல்லாதது. ஓடும் நதிகளில் இருப்பதை விட ஓடாத மழைக்காலங்களில் மட்டும் நீர்வரத்து ஏற்படுகிற நதிகளில் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பை, கழிவுநீர் தேங்குகின்றன.கனமழையின் போது அடித்து செல்லப்படும் இவை அணைகள், கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய்கள் வரை பரவுகின்றன. நீர் வழித்தடங்கள் அனைத்திலும் பிளாஸ்டிக் குப்பை பயணிக்கின்றன. இப்படியே போனால் வரும் நாட்களில் ஆற்றின் வழித்தடமே மாறிவிடும். மேலும் அணைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் பாதுகாப்பற்றதாக மாறிவிடும். ஏற்கனவே கவுசிகா நதி கலக்கும் குல்லுார்சந்தை அணையில் கழிவு தன்மை அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நீரை பாசனத்திற்கும், மீன் வளர்ப்புக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். குடிநீருக்கு பயன்படுத்துவது கிடையாது. இதே நிலை மாவட்டத்தின் பிற அணைகளுக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை