நரிக்குடி பகுதியில் அதிகரிக்கும் திருட்டு தீவிர கண்காணிப்பு தேவை
நரிக்குடி: நரிக்குடி பகுதியில் டூவீலர், ஆடுகள், உண்டியல் திருட்டு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, கடுமையான நடவடிக்கையின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.நரிக்குடி பகுதியில் விவசாயம் நலிவடைந்து உள்ளதால், வெளியூர்களுக்கு கூலி வேலைக்குச் செல்கின்றனர். பெரும்பாலான கிராமங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து வருகிறது. இதனைத் தெரிந்து கொண்டு பட்டப் பகலில் ஆடுகள், டூவீலர்களை திருடி செல்கின்றனர். இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. காட்டுப் பகுதிகளில் இருக்கும் கோயில்களில் உள்ள உண்டியல்களை சர்வ சாதாரணமாக உடைத்து திருடி செல்கின்றனர். சமீபத்தில் வீரசோழன் பகுதியில் தொடர்ந்து உண்டியல்களை உடைத்து, பணத்தை திருடிய நபர்களை மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பெரும்பாலும் இளைஞர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.மேலும் வேறு பகுதிகளிலிருந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் நரிக்குடி பகுதியை தேர்ந்தெடுத்து, தஞ்சம் அடைகின்றனர். எங்கு பார்த்தாலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் மறைந்து வாழ ஏற்ற இடமாக இருந்து வருகிறது. தொடர்ந்து, திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.