உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீபாவளி விடுமுறைக்கு வெளியூர் செல்பவர்கள் போலீஸ் ஸ்டேஷன்களில் விபரங்கள் தெரிவிப்பது...அவசியம்;

தீபாவளி விடுமுறைக்கு வெளியூர் செல்பவர்கள் போலீஸ் ஸ்டேஷன்களில் விபரங்கள் தெரிவிப்பது...அவசியம்;

மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம், அதனை சுற்றிய பகுதிகளில் மொத்தம் 55 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளது. பொங்கல், தீபாவளி ஆகிய பண்டிகை நாட்கள், குழந்தைகளுக்கான தேர்வு விடுமுறைகள், தொடர் விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆன்மிக தலங்கள், சுற்றுலா, வெளி மாநிலம், நாடுகளுக்கும் சென்று வருகின்றனர். இப்படி வெளியூர் செல்பவர்கள் தங்கள் வீட்டு உடமைகள் பாதுகாப்பாக இருக்க போலீஸ் ஸ்டேஷன்களில் முன் அறிவிப்பு செய்து செல்ல வேண்டும். எத்தனை நாட்கள் வெளியூர் செல்கிறோம், புறப்படும் நாள், திரும்ப வரும் நாள் ஆகியவற்றை தெளிவாக தெரியப்படுத்தி வீட்டிற்கு வந்த பின் நேரில் சென்று போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். இப்படி ஸ்டேஷன்களில் முன்கூட்டியே தெரிவித்து செல்வதால் 'லாக்டு ஹவுஸ்' பட்டியலில் பூட்டிய வீட்டை சேர்த்து தொடர் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டு, சந்தேகபடும் விதத்தில் சுற்றித்திரிபவர்களை கண்காணித்து திருட்டு நடக்காதவாறு நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் மாவட்டத்தில் வெளியூர் செல்லும் மக்கள் யாரும் தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் சென்று தெரியப்படுத்துவதில்லை. இதனால் வழக்கமான ரோந்து பணிகளில் மட்டும் போலீசார் ஈடுபடுகின்றனர். இது போன்ற நேரத்தை பயன்படுத்தி திருடர்கள் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், விலையுர்ந்த பொருட்களை திருடி செல்கின்றனர். விருதுநகரில் அக். 14ல் ரயில்வே குடியிருப்பில் இரு ஊழியர்களின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம், லேப்டாப் திருடப்பட்டது. திருட்டு சம்பவங்கள் நடந்த பின் வழக்கு பதிந்து விசாரிப்பதை விட, தாமாக முன் வந்து வெளியூர் செல்லும் போது தகவல் தெரிவித்தால் திருட்டை தடுக்கும் வழியாக இருக்கும். மேலும் போலீசார் தங்களின் எல்கைக்குள் இருக்கும் பொது இடங்களில் வீட்டை பூட்டி வெளியூர் செல்பவர்கள் ஸ்டேஷனில் தகவல் தெரிவித்து செல்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களும், போலீசாரும் இணைந்து ஒத்துழைத்தால் மட்டுமே திருட்டு நடப்பதை தடுக்க முடியும். எனவே தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்பவர்கள் போலீஸ் ஸ்டேஷன்களில் தகவல் தெரிவித்து செல்வது குறித்து மாவட்ட போலீஸ் நிர்வாகம் பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களும் தகவல் தெரிவித்து சென்று திருட்டை தடுக்கும் விதத்தில் செயல்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி