| ADDED : நவ 24, 2025 09:24 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தற்போது சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளதால் பள்ளி நேரங்களான காலை, மாலையில் கோட்டநத்தம் செல்லும் அரசு பஸ்சை நீட்டித்து இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் நான்கு வழிச்சாலையில் உள்ள பட்டம்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் குப்பாம்பட்டி, ராமசாமிபுரம், அதனை சுற்றிய பகுதிகளில் இருந்து தினசரி சைக்கிள், ஆட்டோக்களில் குழுவாக சேர்ந்தும், நடந்தும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மாணவர்கள் சில நேரங்களில் நான்கு வழிச்சாலையில் வாகன விபத்து அச்சத்துடன் ரோட்டை கடந்து பள்ளிக்கு நடந்து வந்து செல்கின்றனர். இதனால் தினசரி உயிரை பணையம் வைத்து வரும் நிலை நீடிக்கிறது. பள்ளிக்கு சர்வீஸ் ரோடு இல்லாததால் பஸ்சை தட நீட்டிப்பு செய்து இயக்க முடியாத நிலை இருந்த நிலையில் தற்போது சர்வீஸ் ரோடும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு பஸ் இயக்கம் மட்டும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே கோட்டநத்தத்தில் இருந்து சாத்துார் செல்லும் அரசு பஸ்சை பட்டம்புதுார் உயர்நிலைப்பள்ளிக்கு காலை, மாலை நேரங்களில் இயக்கினால் குப்பாம்பட்டி, ராமசாமிபுரம், அதனை சுற்றிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு உதவியாக அமைவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.