| ADDED : டிச 27, 2025 04:28 AM
சிவகாசி: ''முன்னாள் முதல்வர் காமராஜர், நாடார் சமூகம் குறித்து அவதுாறாக பேசிய யுடியூபர் முக்தாரை கைது செய்யாவிட்டால் சென்னை தலைமை செயலகம் நோக்கி பேரணி நடத்தப்படும்,'' என, சிவகாசியில் நாடார் மகாஜன சங்கம் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தெரிவித்தார். சிவகாசியில் நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கரிக்கோல்ராஜ் கூறியதாவது: காமராஜர் குறித்து அவதுாறாக பேசிய யுடியூபரை கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் 2026 ஜன., 9ல் நாடார் மகாஜன சங்கம், நாடார் மகமை சங்கம், நாடார் உறவின் முறைகள், கிறிஸ்தவ நாடார் சங்கம் சார்பில் போராட்டம் நடக்கும். தமிழக அரசை தவறாக பேசுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, முன்னாள் முதல்வர் காமராஜர் மற்றும் நாடார் சமூகம் குறித்து தவறாக பேசியவர் மீது தமிழகம் முழுவதும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. திட்டமிட்டு நாடார் சமூகம் குறித்து தவறான வரலாறை பதிவு செய்யும் வகையில் தகவல் பரப்பப்படுகிறது. காமராஜர் முதல்வர் ஆவதற்கு முன்னரே நாடார் சமூகம் முன்னேறிய சமூகமாக உள்ளது. யுடியூபரை கைது செய்யாவிடில் சென்னை கோட்டையை நோக்கி ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளோம். அதற்குள் தமிழக அரசு யுடியூபரை கைது செய்ய வேண்டும். திருநெல்வேலி வந்த முதல்வரை சந்திக்க நேரம் கேட்டோம் வழங்கவில்லை. அனைத்து நாடார் அமைப்புகளும் இணைந்து சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டும் ஒதுக்கவில்லை. இது அரசு ஒரு சார்புடன் செயல்படுவது போல் தெரிகிறது என்றார்.