கண்காணியுங்க
l விதி மீறி கல்குவாரிகளுக்கு வெடி வைத்து தகர்ப்பதை l வெடி மருந்து பொருட்களை லாரிகளில் கொண்டு செல்வதை... அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே உள்ள கல் குவாரிகளில் பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதிலும் வெடி மருந்துகளை லாரிகளில் கொண்டு செல்வதில் விதிமீறல்கள் நடப்பதால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கனிம வளத்துறை அதிகாரிகள் இவற்றை கண்காணித்து அபாயம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி பகுதியில் மேல கண்டமங்கலம், மீனாட்சிபுரம், ஆலடிப்பட்டி, கல்லூரணி உள்ளிட்ட கிராமங்களில் 10 க்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒரு சில அனுமதி பெற்றும், மற்றவை அனுமதி பெறாமலும் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. இவற்றில் பாறைகளை வெடி வைத்து தகர்த்து ஜல்லி கற்கள், உடை கற்களாக உடைக் கும் பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. பாறைகளை வெடி வைத்து உடைத்து எடுப்பதில் பல்வேறு விதமான விதிகளை கனிம வளம், சுரங்கம், வருவாய் துறை உள்ளிட்ட துறைகள் விதித்துள்ளன. ஆனால் இவற்றில் எதையும் கல்குவாரி நடத்துபவர்கள் பின்பற்றுவது இல்லை. குறிப்பாக பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதில் அதிகபட்ச விதி மீறல்கள் உள்ளது. அதிக அழுத்தம் போன்ற வெடி மருந்து பொருட்களை பயன்படுத்தி, நினைத்த நேரத்தில் பாறைகளுக்கு வெடிகளை வைப்பதால், பறந்து வரும் பெரிய கற்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் விழுகின்றன. இதனால் இங்கு வேலை செய்யும் விவசாயிகள் பயத்துடனே பணி செய்ய வேண்டி உள்ளது. குவாரிகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் பல வீடுகள் விரிசல் கண்டுள்ளன. குவாரிகளில் வெடிகளை சூரிய உதயத்திற்கு பின்பு தான் வெடிக்க வேண்டும், வெடிப்பதற்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை தர வேண்டும், இரவு நேரங்களில் வெடிக்க கூடாது உள்ளிட்ட விதிகள் இருந்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால், அனைத்தும் மீறப் படுகின்றன. அந்தப் பகுதி மக்களின் உயிருக்கு வேட்டு வைக்கின்றன. மத்திய அரசின் வெடி பொருள் சட்டத்தின் படி ஒவ்வொரு காரியத்திலும் அதன் பரப்பளவு அமைந்துள்ள இடம் ஆகியவற்றின்படி வெடி பொருட்கள் வழங்குவதின் அளவு மாறுபடும். அதிகபட்சம் ஐந்து கிலோ எடை அதிகமாக வெடிப்பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. அதற்கு மேல் கொண்டு சென்றால் சிறப்பு அனுமதி பெற வேண்டும். பாறைகளில் துளைகளின் ஆழம் 1 முதல் 3 மீட்டர் வரை தான் இருக்க வேண்டும். வெடிக்கும் போது ஒலியின் அளவு குடியிருப்பு பகுதிகளில் 55 டெசிபல் என்ற அளவில் இருக்க வேண்டும். இது போன்ற விதிகளை மீறி குவாரிகளுக்கு வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதேபோன்று, வெடி மருந்து பொருட்களை கொண்டு செல்வதற்கு உரிய வாகனங்களில் பகலில் தான் வெடிப்பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். வெடி மருந்து பொருட்களை குவாரிகளுக்கு சப்ளை செய்து விட்டு, பயன்படுத்தியது போக, மீதி இருந்தால் உரிய பாதுகாப்புடன் குடோனில் ஒப்படைக்க வேண்டும். அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் 15 நாட்களுக்கு முன்பு, அதிகாலையில் கரூரிலிருந்து திருச்சுழி பகுதி குவாரிகளுக்கு வெடி மருந்து பொருட்களை கொண்டு செல்லும் வேனை டி.எஸ்.பி., தலைமையில், போலீசார் பறிமுதல் செய்தனர். இரவு நேரத்தில் வந்ததால் உரிய வழக்கு பதியாமல், அனைத்து ஆவணங்களும், 'பேப்பர்' களும் சரியாக இருக்கிறது என விட்டு விட்டனர். இதே போன்று ஒரு வாரத்திற்கு முன்பு, திட்டமிட்ட போலீஸ் குற்ற பிரிவு (ஒ.சி.யு.,) போலீசாருக்கு கரூரில் இருந்து 2 வாகனங்களில் அதிக அழுத்தம் கொண்ட வெடி பொருட்கள் விதிகளை மீறி வருவதாக வந்த தகவலை அடுத்து மதுரை - தூத்துக்குடி நான்கு வழிசாலையில் காத்திருந்தனர். வாகனங்கள் பிடிக்கப்பட்டு பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டு, பின்னர் சோதனை முடிந்தது என அனுப்பப்பட்டன. திருச்சுழி பகுதிகளில் கொடி கட்டி பறக்கும் குவாரிகளின் உரிமையாளர்களின் பிடியில் சுரங்கம், கனிம வளம், போலீஸ், வருவாய் துறை இருந்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. தொடர்ந்து அதிக அழுத்தம் கொண்ட வெடி பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்வதும், குவாரிகளில் விதிகளை மீறி வெடிகளை வைப்பதும், பாறைகள் சிதறுவதும், வீடுகளில் விரிசல் ஏற்படுவதும் இதனால் விவசாயம் பாதிப்பதும் தொடர்கதையாக உள்ளது. பல ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளின் 'ஆசி' யோடு விதிகளை மீறி நடந்து வரும் குவாரி தொழில், த.வெ.க., ஆட்சியிலும் தொடர்கிறது என, திருச்சுழி தொகுதி மக்கள் புலம்புகின்றனர். அரசு சிறப்பு ஆய்வு செய்து குவாரிகளின் விதி மீறல்களை கட்டுப்படுத்த வேண்டும்.