சுதந்திர தின விடுமுறை மறுத்த77 கடைகள், உணவு நிறுவனங்கள் தொழிலாளர் துறை நடவடிக்கை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய 77 கடைகள், உணவு நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக (அமலாக்கம்) உதவி கமிஷனர் ஆனந்தி தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: தேசிய விடுமுறையான சுதந்திர தினத்தில் நேற்று முன்தினம் விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 37 கடைகள், 40 உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் தேசிய விடுமுறையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம், மூன்று நாட்களுக்குள் மாற்று விடுப்பு வழங்க வேண்டும். இதை மீறுபவர்கள்மீது மதுரை தொழிலாளர் இணை கமிஷனரால் நீதிமன்றத்தில் கேட்பு மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் அனைத்து கிராம சபை கூட்டத்திலும் நடப்பாண்டிற்குள் குழந்தை தொழிலாளர்முறையை அகற்றவும், 2030க்குள் கொத்தடிமை தொழிலாளர் முறை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குழந்தை, கொத்தடிமை தொழிலாளர் யாராவது இருப்பது தெரிந்தால் 1098 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.