ஸ்ரீவில்லிபுத்துார்: கழிவுகள், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படும் நீர் வரத்து ஓடைகள், நீர் பிடிப்பு பகுதிகளில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள், கழிவுகளால் சுகாதாரக் கேடு போன்ற பிரச்சனைகளால் ஸ்ரீவில்லிபுத்துார் செங்குளம் கண்மாய் பாசன விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த கண்மாயின் மூலம் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள், 200 ஏக்கர் பரப்பளவில் 100 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர். அதிகளவில் நெல் சாகுபடி செய்கின்றனர். இந்த கண்மாய்க்கு வடமலைக்குறிச்சி, பெரியகுளம் கண்மாய்களில் இருந்து தண்ணீர் வருவதற்கான நீர் வரத்து ஓடைகள் உள்ளன. இதில் வடமலைகுறிச்சி நீர் வரத்து ஓடையில் நகரின் ஒட்டு மொத்தக் கழிவு தண்ணீர் தான் வருகிறது. பெரியகுளம் கண்மாயில் இருந்து வரும் நீர் வரத்து ஓடையில் கிளைச் சிறை அருகில் செங்குளம், ராஜகுல ராமபேரி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வழியில் தடுப்பு சுவரும், சமரணையும் உள்ளது. இதில் செங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் சமரணை உடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதன் பாதையில் குடியிருப்புகள், கட்டடங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதனால் முழு அளவில் தண்ணீர் தேக்க முடியாமல் விவசாயம் செய்யும் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. கண்மாயில் அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகிறது. நீர் பிடிப்பு பகுதிகள் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே, கண்மாயை முழு அளவில் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, நீர்வரத்து பாதைகளை சுத்தம் செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழு அளவில் தண்ணீர் தேங்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என இந்த கண்மாய் பாசன விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். வரத்து பாதையை சீரமைக்க வேண்டும் பெரியகுளம் கண்மாயில் இருந்து வரும் நீர் வரத்து பாதையில் செடி, கொடிகள் வளர்ந்தும், புதர்மண்டியும் காணப்படுகிறது. இதனால் கண்மாயில் போதிய அளவிற்கு தண்ணீர் தேக்க முடியவில்லை. எனவே, நீர்வரத்து பாதைகளை சீரமைக்க வேண்டும். - கோவிந்தசாமி, விவசாயி. ஆக்கிரமிப்புகளை அகற்றணும் இந்த கண்மாய்க்கு பெரியகுளம் கண்மாயில் இருந்து வரும் நீர் வரத்து பாதையில் ஏற்கனவே செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படும் நிலையில், கரையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் தண்ணீர் வரத்து குறைகிறது. - காசி, விவசாயி. கழிவை தடுக்க வேண்டும் வடமலைக்குறிச்சி கண்மாயில் இருந்து வரும் நீர்வரத்து பாதையில் நகரின் ஒட்டுமொத்த கழிவு தண்ணீரும் கழிவு பொருட்கள் தான் செங்குளம் கண்மாய்க்கு வருகிறது. இந்த கழிவு தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் போது பயிர்கள் பாதிக்கபடுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கோவிந்தராஜ், விவசாயி. நடவடிக்கை எடுக்கப்படும் செங்குளம் கண்மாயில் காணப்படும் குறைகள் குறித்து விவசாயிகள் அளித்துள்ள புகார்கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். - விக்னேஷ் குமார், உதவி பொறியாளர், நீர்வளத்துறை. ஆக்கிரமிப்புகளை அகற்றணும் இந்த கண்மாய்க்கு பெரியகுளம் கண்மாயில் இருந்து வரும் நீர் வரத்து பாதையில் ஏற்கனவே செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படும் நிலையில், கரையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் தண்ணீர் வரத்து குறைகிறது. - காசி, விவசாயி. நடவடிக்கை எடுக்கப்படும் செங்குளம் கண்மாயில் காணப்படும் குறைகள் குறித்து விவசாயிகள் அளித்துள்ள புகார்கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். - விக்னேஷ் குமார், உதவி பொறியாளர், நீர்வளத்துறை.