பெண் குரலில் பேசி ஏமாற்றிய நண்பர் வெட்டிக்கொலை டிஸ்மிஸ் போலீஸ்காரர் உட்பட 4 பேருக்கு ஆயுள்
ஸ்ரீவில்லிபுத்துார்: பெண் குரலில் பேசி ஏமாற்றிய நண்பர் அய்யனாரை 25, வெட்டி கொலை செய்த வழக்கில் டிஸ்மிஸ் போலீஸ்காரர் கண்ணன் குமார் 38, அவரது நண்பர்கள் டென்சிங் தமிழரசன் 35, விஜயகுமார் 31, தமிழரசன் 23,ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கிறிஸ்தியான் பேட்டையை சேர்ந்தவர் அய்யனார். பி.எட் படித்துவிட்டு கூமாபட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றினார். 2018 ஜன. 23 இரவு வீட்டில் இருந்த அய்யனாரை, அவரது நண்பர் டென்சிங் தமிழரசன் அழைத்துச் சென்றார். இரவு 10:00 மணி கடந்தும் வீடு திரும்பாத நிலையில் கண்மாயில் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். வத்திராயிருப்பு போலீசார் டென்சிங் தமிழரசனை பிடித்து விசாரித்ததில் அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார், தமிழரசன் ஆகியோர் சேர்ந்து அய்யனாரை கொலை செய்தது தெரியவந்தது. அய்யனாரும், அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் குமார், டென்சிங் தமிழரசன், விஜயகுமார், தமிழரசன் ஆகியோர் நண்பர்கள். கண்ணன் குமார் திருமணமாகி சென்னையில் போலீசாக பணியாற்றி வந்தார். மற்றவர்கள் உள்ளூரில் வசித்து வந்தனர். அய்யனாருக்கு பெண் குரலில் பேசும் பழக்கம் உண்டு. சென்னையில் இருந்த கண்ணன் குமாரிடம், திருநெல்வேலி கவுரி என்ற பெயரில் பெண் குரலில் பேசி வந்துள்ளார். சில மாதங்களுக்குப்பின் தன்னிடம் பெண் குரலில் பேசுவது அய்யனார் என கண்ணன்குமாருக்கு தெரிய வந்தது. போலீசாக இருந்தும் தான் ஏமாற்றப்பட்டதால் மன வேதனை அடைந்த கண்ணன் குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் உள்ளூரிலும் தெரியவந்ததால் அவர் ஆத்திரமடைந்து அய்யனாரை கொலை செய்ய திட்டமிட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அய்யனாரை, கண்மாய்க்கு அழைத்து வந்து டென்சிங் தமிழரசன், விஜயகுமார், தமிழரசன் மூவரும் அடித்தும், வெட்டியும் கொலை செய்தது தெரியவந்தது. 4பேரையும் வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை, ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி மணி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் அன்னக்கொடி ஆஜரானார். கண்ணன் குமார் மீது பல வழக்குகள் இருந்ததால் அவர் போலீஸ் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.