4 ஆண்டுகளாக ஆமைவேகத்தில் நடக்கும் அரசு பள்ளி கட்டுமானம் மன்னார்கோட்டை மாணவர்கள் பரிதவிப்பு
விருதுநகர்: விருதுநகர் அருகே மன்னார்கோட்டை ஊராட்சியில் 4 ஆண்டுகளாக ஆமைவேகத்தில் நடக்கும் பள்ளி கட்டுமான பணிகளால் மாணவர்கள் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் அருகே மன்னார்கோட்டை ஊராட்சியில் ஒன்றிய துவக்கப்பள்ளி ஓட்டுக் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இதில் மழை ஓழுகுவது உள்ளிட்ட காரணங்களால் கூடுதல் வகுப்பறை கட்ட திட்டமிடப்பட்டு எதிரே உள்ள நிலம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டது. இதற்காக ஊரக வளர்ச்சித்துறை குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் மன்னார்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கூடுதலாக 2 வகுப்பறைகள் கட்டும் பணிகளை 2021-22ம் நிதியாண்டில் துவக்கியது. இதன் மதிப்பு ரூ.27.60 லட்சம். இந்த கட்டடம் 2024ல் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணாமல் மாதக்கணக்கில் பூட்டிக் கிடந்தது. மின் இணைப்பு தரப்படாமல் இழுத்தடிப்பதால் மூடிக்கிடப்பதாக கூறினர். இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் செய்து நிலுவை தொகைகளை செலுத்தாமல் இருந்து வந்ததும் இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது மின் இணைப்பு பெற்று விட்ட நிலையில், அருகே சத்துணவு அறை கட்டி வருகின்றனர். கிட்டதட்ட நான்கு ஆண்டுகளாக இந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் ஓட்டுக் கட்டடத்தில் பரிதவிக்கின்றனர். பணிகளை துரிதப்படுத்த ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உத்தரவிட வேண்டும். இது குறித்து ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி கூறும் போது, கட்டட பணிகளை முடித்து பள்ளிக்கல்வித்துறையிடம் ஒப்படைத்து விட்டோம். கழிப்பறை வசதி கேட்டதால் தற்போது அப்பணிகளை செய்து வருகிறோம், என்றார். முதன்மை கல்வி அலுவலர் மதன் கூறியதாவது: விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.