மலையடிவார பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பு; வனத்துறை, போலீஸ் ஒருங்கிணைந்த ஆய்வு அவசியம்
விருதுநகர் மாவட்ட வனப்பகுதிகளில் அரிய வகை விலங்குகளான மான், முயல், காட்டுப்பன்றி, உடும்பு உள்ளிட்டவைகளின் வேட்டை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வனத்துறை கண்காணிப்பில் ஈடுபட்டு பல்வேறு வழக்குகள் பதிந்து வருகின்றன. இருப்பினும் வறட்சியால் தண்ணீர் தேடி வரும் காட்டு விலங்குகளை எதிர்பார்த்தும் வனப்பகுதியில் வேட்டைக்காக என நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து பழங்களில் வைத்து இறைச்சிக்காக வன விலங்குகளை கொல்வதும் தொடர்கிறது. மாவட்டத்தில் மலையை ஒட்டிய தேவதானம், சேத்துார், சுந்தர்ராஜபுரம், ராஜபாளையம், செண்பகத் தோப்பு, வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி இச்சம்பவங்கள் நிகழ்கின்றன. இரண்டு நாள் முன்பு சேத்துார் அருகே சுந்தர்ராஜபுரத்தில் தந்தையும் மகனும் தோப்பில் 7 நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்ததை சேத்துார் ஊரக போலீசார் கைப்பற்றியுள்ளனர்.ஜனவரி மாதம் மம்சாபுரத்தில் பன்றி வேட்டைக்காக நான்கு நாட்டு வெடிகுண்டுகள், டிசம்பர் மாதம் செண்பகத் தோப்பு ரோடு ஆட்டுப்பண்ணை அருகே வேட்டைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை கொடுக்கல் வாங்கல் பிரச்னைக்காக எதிர் தரப்பின் மீது வீசினர்.முந்தைய காலங்களில் இதே பகுதிகளில் விலங்கு வேட்டைக்காக கொய்யா பழங்களில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து இரண்டு மாடுகள் தாடை கிழிந்து உயிரிழந்தன. இது தவிர வெளிவராத தகவல்களும் உண்டு. இதுபோன்ற பிரச்னைகளில் வனப்பகுதிகளில் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட துறையினரும், தனியார் நடைபெறும் சம்பவங்களுக்கு போலீசாரும் வழக்கு பதிந்து விசாரணையை முடிக்கின்றனர். இந்நிலையில் தொடர்ந்து வனவிலங்கு வேட்டைக்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்து இதில் ஈடுபடுபவர்களின் வரலாறை தனித்தனியாக பின் தொடரும் இத்துறையினர் ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.இதை தவிர்த்து சம்பவங்கள் நிகழ்வது குறித்து தெரிய வந்தால் தங்கள் வசம் உள்ள தகவல்களை துறைகளிடையே பகிர்வதுடன் கண்காணிப்பையும் அதிகப்படுத்துவது இது போன்ற சம்பவங்களை தடுக்க நல்ல வாய்ப்பாக அமையும். இதனால் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பவர்கள், அதை வைத்து வேட்டையாடுபவர்களை கைது செய்ய வனத்துறை, போலீசாரும் இணைந்து செயல்பட வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.