உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நூறு நாள் வேலை திட்டத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள் வீணாகுது; பராமரிப்பு இல்லாமல் போனதால் கோடிக்கணக்கான நிதி வீண்

நூறு நாள் வேலை திட்டத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள் வீணாகுது; பராமரிப்பு இல்லாமல் போனதால் கோடிக்கணக்கான நிதி வீண்

இவற்றில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்) மூலம் கிராமப்புற ஏழை மக்களுக்கு கண்மாய் வெட்டுதல், மழை நீர் வரத்து ஓடைகளை பராமரித்தல், குடிநீர் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் மரக்கன்றுகள் நடுதல், பராமரித்தல் போன்ற இயற்கை வளங்களை மேம்படுத்தவும் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் நூற்றுக்கணக்கான ஏழை மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள பொது இடங்கள், ரோடுகள், நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நட தேவையான நிதி மற்றும் மரக்கன்றுகள் அளிக்கப்பட்டுள்ளது. மரங்கள் நன்கு வளர்ந்தால் பசுமையாக இருப்பதுடன் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. நன்கு வளர்ந்த மரங்கள் கோடை காலங்களில் கால்நடைகளுக்கு இளைப்பாறவும் நிழலாகவும் இருக்கும்.ஆனால் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஊராட்சி ஒன்றியங்கள் மெத்தனம் காட்டி வருவதால், பல ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடுவது அதனுடன் போட்டோ எடுத்துக் கொள்வது என்ற அளவோடு முடிந்து போனது. அதிகாரிகளும் தேவையான இடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதா. அவற்றிற்கு தண்ணீர் கிடைப்பதற்கான வழி உள்ளதா, நன்கு பராமரிக்கப்படுகிறதா உள்ளிட்டவைகளை ஆய்வு செய்வதுமில்லை.மரக்கன்றுகளை நடுவதுடன் மட்டுமல்லாமல் அவற்றிற்கு தேவையான அளவு தண்ணீர் பாய்ச்சுவதை உறுதிப்படுத்த வேண்டும். மரக்கன்றுகளை கால்நடைகளிடமிருந்து பாதுகாக்க வேலி அமைக்க வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வளர்ப்பதின் அவசியத்தை உணர்த்த வேண்டும். முறையாக பராமரிக்க அறிவுறுத்த வேண்டும். இதை எதையும் செய்யாமல் விட்டதால் ஒவ்வொரு ஊராட்சிக்கும் லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கி, ஒரு சில ஊராட்சிகளை தவிர பெரும்பாலான ஊராட்சிகளில் இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்ட நிதி வீணாகிவிட்டது. முறையான பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம். மாவட்ட நிர்வாகம் இது குறித்து மரக்கன்றுகளை முறையாக பராமரிக்கவும் தண்ணீர் பாய்ச்சுவதற்குரிய நடவடிக்கை எடுக்க ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி