பாதாளசாக்கடை மேன்ஹோல்களால் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
விருதுநகர் : விருதுநகர் நகராட்சியில் பாதாளசாக்கடை மேன்ஹோல்கள் ரோடு மட்டத்தில் இருந்து உயரமாகவும், பள்ளமாகவும் உள்ளது. இதனால் சைக்கிள், டூவீலரில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உண்டாகியுள்ளது. விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் பாதாளச்சாக்கடை திட்டம் முழுவதுமாக அமைக்கப்படவில்லை. நகராட்சி பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலை ரோடுகளில் பாதாளசாக்கடை மேன்ஹோல்கள் ரோடு மட்டத்தில் இருந்து பள்ளமாகவும், உயரமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நகராட்சி பகுதியில் புதிதாக ரோடு அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதில் கே.ஆர்., கார்டனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய ரோடு அமைக்கும் பணிகளுக்காக சேதமான ரோட்டை முழுவதும் அகற்றி புதிதாக அமைக்காமல் ஏற்கனவே இருந்த ரோட்டின் மீது புதிய ரோட்டை அமைத்துள்ளனர். இதே போல மதுரை ரோட்டில் இருந்து விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் ரோடும், புல்லலக்கோட்டை ரோடு இணையும் ரோட்டில் புதிதாக ரோடு அமைக்கும் பணிகள் நடக்கிறது. இந்த ரோடும் தோண்டி அமைக்கப்படாமல் உயரமாக அமைக்கப்பட்டு வருகிறது. இது போன்ற புதிதாக ரோடு அமைக்கும் பணிகளில் பழைய ரோட்டை தோண்டி புதிதாக அமைக்காததால் பாதாளசாக்கடை மேன்ஹோல்கள் ரோடு மட்டத்தில் இருந்து உயரமாகவும்,பள்ளமாகவும் அமைந்து வாகன ஓட்டிகளை விபத்துக்குள்ளாக்கும் நிலைக்கு மாறியுள்ளது. எனவே நகராட்சி பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலை ரோடுகளில் பாதாள சாக்கடை மேன்ஹோல்களை ரோடு மட்டத்திற்கு மாற்றி அமைக்கவும், புதிதாக ரோடு அமைக்கும் இடங்களில் பழைய சேதமான ரோட்டில் தோண்டி மேன்ஹோல் மட்டத்திற்கு அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.