மின்கம்பங்கள் சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்
சிவகாசி: சிவகாசி சிறுகுளம் கண்மாய்க்கரை வழியாக ரோட்டோரத்தில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் நிறுவனங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்வதற்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவற்றில் ஒரு சில மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. வெறும் கம்பிகளால் தாங்கி நிற்கின்ற இந்த மின்கம்பம் எதிர்பாராத விதமாக சாய்ந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில் சிறுகுளம் கண்மாய் கரையில் நடைபாதை அமைப்பதற்காக பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. ஆனால் சேதமடைந்த இந்த மின்கம்பத்தை அகற்றாமலேயே கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. கற்கள் பதிக்கும்போது இது குறித்து மின் துறையினரிடம் தகவல் தெரிவித்து இருந்தால் அப்பொழுதே மாற்றி இருக்கலாம். ஆனாலும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.