விபத்துகளை தவிர்க்க தனியார் பஸ்களில் கதவுகள் தேவை
விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. டூவீலர்கள், கார்கள் என ஏராளமான தனிநபர் வாகனங்கள் இயங்கி வந்தாலும் பொது பயன்பாட்டுக்காக அரசு , தனியார் பஸ்கள் மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களிலும், சுற்றியுள்ள தேனி, மதுரை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் இயங்கி வருகிறது. இதில் ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை நகரங்களில் இருந்து புறப்படும் அரசு, தனியார் பஸ்கள் அதிகளவில் மதுரைக்கு இயங்கி வருகிறது. மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுவதற்கு முன்பு வரை பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்டில் இருந்து தான் தென் மாவட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயங்கி வந்தது. இதில் பெரும்பாலான தனியார் பஸ்கள் முதன் முதலில் பெர்மிட் வாங்கும்போது மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து தான் புறப்படும் வகையில் நேர கால அட்டவணை வழங்கப்பட்டு அதன்படியே இயங்கி வந்தது. இந்த பஸ்களுக்கு ஒரு ட்ரிப்பிற்கும், மற்றொரு குரூப்புக்கும் இடையே குறைந்தபட்சம் 45 முதல் 60 நிமிடம் வரை ஓய்வு நேரம் இருந்தது. ஆனால், மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு வந்த பின்பு தென் மாவட்டத்திலிருந்து இயங்கும் அனைத்து பஸ்களும் அங்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கிலோமீட்டர் தூரம் அதிகரித்ததால் தங்களுக்கான நேரத்தை எடுப்பதற்காக தனியார் பஸ்கள் அதிவேகத்தில் செல்லும் நிலை உள்ளது. தற்போது மதுரையிலிருந்து ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை நகரங்களுக்கு இயங்கும் தனியார் பஸ்கள் முன்புறம் முகப்பு விளக்குகளை எரிய விட்டு அசுர வேகத்தில் அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் செல்கிறது. அரசு பஸ்களுடன் ஒப்பிடுகையில் தனியார் பஸ்கள் மிகவும் வேகமாக செல்வதால் மக்களும் அதிகளவில் அப்பஸ்களில் பயணித்து வருகின்றனர். இதில் பஸ்களில் முன்புறம், பின்புறம் உள்ள வாசல்களில் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகள் சுய பாதுகாப்பு இல்லாமல், அலைபேசியை பயன்படுத்தியவாறு பயணிக்கின்றனர். மேலும் பஸ்களின் வாசல் படியை ஒட்டி உள்ள சீட்டுகளில் உட்கார்ந்து பயணிக்கும் பயணிகள் பாதுகாப்பற்ற முறையில் பயணிக் கின்றனர். இவ்வாறு செல்லும் போது வளைவு பகுதியிலோ, முன்பு செல்லும் பஸ்சை ஓவர்டேக் செய்யும் போதோ பயணிகள் வெளியில் தவறி விழும் அபாயம் உள்ளது. ஒரு தனியார் பஸ்ஸில் முன் சீட்டில் அமர்ந்து பயணித்த போது, சடன் பிரேக் போட்டதால் கையில் இருந்த குழந்தைகள் ரோட்டில் விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது ஒரு உதாரணம். தற்போது அரசு போக்குவரத்துக் கழக டவுன், புறநகர் பஸ்களில் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது. இது பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஆனால், தனியார் பஸ்களில் இதோபோல் கதவுகள் இல்லாததால் காலை, மாலை வேலை நேரங்களில் படிகளில் தொங்கிக் கொண்டே பயணித்து விபத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க அரசு பஸ்ஸில் உள்ளது போல் தனியார் பஸ்களிலும் கதவுகள் அமைக்க விருதுநகர் மாவட்ட அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.