அலட்சியம்: மேன்ஹோல் திறப்பில் உயர்நீதிமன்ற உத்தரவு: சுகாதார ஆய்வாளர் இன்றி தொடருது பணிகள்
விருதுநகர்: பாதாள சாக்கடைக்கான மேன்ஹோல் திறப்பின் போது சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் பணி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சிகளில் அலட்சியம் தொடர்கிறது. இன்றும் துாய்மை பணியாளர்களே திறந்து பணியில் ஈடுபடும் சூழல் உள்ளது.மாவட்டத்தில் விருதுநகர், ராஜபாளையம், சாத்துார் நகராட்சிகளில் மட்டுமே பாதாள சாக்கடை உள்ளது. மாநகராட்சியான சிவகாசியில் கூட இல்லை. ஆனால் சிவகாசி மக்கள் நீண்ட காலமாக பாதாள சாக்கடை வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்நிலையில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மேன்ஹோல்களும் எளிதில் லீக் ஆகி வருகின்றன. தினசரி ஏதாவது ஒரு மேன்ஹோல் லீக் ஆகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய பாதாள சாக்கடைக்கான மேன்ஹோல் லீக்கை திறந்து பணி செய்ய வேண்டும். அடைப்பை அகற்ற வேண்டும். இதை சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் செய்ய வேண்டும். இது போன்று முன்பு தமிழகத்தில் நடந்த சம்பவத்தால் மேன்ஹோலை திறக்கும் போது விஷவாயு தாக்கி துாய்மை பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.இறந்த பின் அரசு நிதி அறிவிப்பதில் எந்த பயனுமில்லை. அதற்கு முன்பே இறப்பை தடுப்பது அவர்களின் குழந்தைகளின் எதிர்கால கல்வியை பாதுகாக்கும். பாதாள சாக்கடை அமைந்த எந்த நகராட்சியிலுமே சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் பணி செய்வதை முறையாக பின்பற்றுவது கிடையாது. இதை பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது.விருதுநகர் நகராட்சியில் அடிக்கடி மேன்ஹோல் லீக் ஆகும். மழைக்காலங்கள் என்றால் தெருவிற்கு தெரு இந்த பிரச்னை உள்ளது. இந்த சூழலில் அடைப்பை அகற்ற வரும் துாய்மை பணியாளர்கள், போதிய பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசங்களை பயன்படுத்துவது கிடையாது. நேற்று கூட புல்லலக்கோட்டை ரோட்டில் பாதாளசாக்கடை சீரமைப்பு பணியின் போது எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் பயன்படுத்தப்படவில்லை.ஆபத்து ஏற்படும் வரை அலட்சியம் தான் கொள்கை என நகராட்சி நிர்வாகம் செயல்படுகிறது என மக்களே குற்றம் சாட்டுகின்றனர். எனவே உயர்நீதிமன்ற உத்தரவு படி சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் பாதுகாப்பு உபகரணங்களோடு மேன்ஹோலை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதை செயல்படுத்துவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.