உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அருப்புக்கோட்டையில் ரயில்வே மேம்பாலத்தில் புதிய முயற்சி முன்னே பளபளப்பு, பின்புறம் எலும்புக்கூடு

அருப்புக்கோட்டையில் ரயில்வே மேம்பாலத்தில் புதிய முயற்சி முன்னே பளபளப்பு, பின்புறம் எலும்புக்கூடு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இருபுறமும் உள்ள சேதமடைந்த தடுப்பு சுவர்களின் முன்புறம் நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பு பணி செய்துவிட்டு பின்புறம் எலும்பு கூடாக விட்டுவிட்டனர். அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி அருகில் உள்ள மதுரை ரோட்டில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. பாலத்தின் நடுப்பகுதி ரயில்வே துறையின் கட்டுப்பாட்டிலும், மற்ற பகுதிகள் நெடுஞ்சாலை துறையினரும் பராமரிப்பு செய்து வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக கடந்து செல்லும். 10 க்கும் மேற்பட்ட புறநகர் பகுதி மக்கள், பாலையம்பட்டி, கோபாலபுரம், கோவிலாங்குளம் உள்ளிட்ட கிராம மக்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி அருப்புக்கோட்டைக்குள் வந்து செல்வர். முக்கியமான இந்த பாலத்தின் தடுப்பு சுவர்கள் பல பகுதிகளில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியில் நீட்டியபடி உள்ளன. ஒரு மாதத்திற்கு முன்பு, நெடுஞ்சாலை துறையினர் தடுப்புச் சுவர்களை பராமரிப்பு பணி செய்தனர். பாலத்தின் முன்புறம் உள்ள தடுப்பு சுவர்களை நன்கு பூசி, எச்சரிக்கை விளக்குகளை பொருத்தி பளபளப்பாக வைத்துள்ளனர். அதேசமயம், தடுப்பு சுவர்களின் பின்புறம் கம்பிகள், காரைகள் பெயர்ந்து எலும்பு கூடாக உள்ளது. பணிகளை முழுவதும் செய்யாமல் கடமைக்கு முன்புறம் மட்டும் பளபளப்பாக பணி செய்துள்ளனர். அரைகுறை பணியால் தடுப்புச்சுவர்கள் பெயர்ந்து விழுந்து விடும் நிலையில் உள்ளது. நெடுஞ்சாலை துறையினர் தடுப்புச் சுவரின் பின்பகுதியை பராமரிப்பு பணி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ