செயல்படாத சுகாதார வளாகம், சேதமான ரோடு விருதுநகர் சிவந்திபுரம் ஆத்துமேடு மக்கள் அவதி
விருதுநகர்: செயல்படாத சுகாதார வளாகம், சேதமான பேவர் கற்கள் ரோடு, சீரமைக்கப்படாத வாறுகால், முறிந்து விழும் நிலையில் மின்கம்பம் என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் சிவந்திபுரம் ஆத்துமேடு மக்கள்.விருதுநகர் நகராட்சியில் உள்ள சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சுகாதார வளாகம் கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது செயல்படாமல் உள்ளது. இதனால் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் சிரமப்படுகின்றனர். திறந்த வெளி கழிப்பிடங்கள் அதிகரித்து சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.இப்பகுதியில் ரோட்டின் ஓரத்தில் உள்ள பெரிய வாறுகால் தடுப்புச்சுவர்கள் சேதமாகி இடிந்து விட்டது. இதை புதிதாக கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகத்தினர் காலம் தாழ்த்தி வருகின்றனர். தடுப்புச்சுவர் இல்லாததால் மழைக்காலத்தில் ரோட்டின் தளத்தில் உள்ள மண் அடித்து செல்லப்பட்டு பேவர் பிளாக் கற்கள் ரோடு சரிந்து விழும் நிலை உள்ளது.ரோட்டின் ஓரங்களில் வைக்கப்பட்ட கற்கள் அகற்றப்படாததால் வாகனங்கள்முன்னேறி செல்ல முடியாமல் சிரமப்படுகின்றன. 13வது தெருவில் பாதாளச்சாக்கடை மேன்ஹோல், ரோடு சேதமாகி இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு வாறுகால் இல்லாததால் மழையின் போது ரோட்டின் மீது தேங்கும் தண்ணீர் வடிந்து செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.இப்பகுதிகளில் குப்பை தொட்டி இல்லாததால் கவுசிகா நதி பாதையில் குப்பையை கொட்டி வருகின்றனர். இதனால் நதியின் மண்வளம், பாதை பாதிக்கப்பட்டுள்ளது. அல்லம்பட்டி ரோட்டில் இருந்து சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதிக்கு வரும் ரோடு முழுவதும் சேதமாகியுள்ளது.