உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் 100 சதவீதம் வரி வசூல் இலக்கை அடைய அதிகாரிகள் தீவிரம்

சிவகாசியில் 100 சதவீதம் வரி வசூல் இலக்கை அடைய அதிகாரிகள் தீவிரம்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டில் 88 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 31 க்குள் 100 சதவீதம் வரி வசூலை முடிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு 2021-ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சிவகாசி மாநகராட்சியில் 55,058 சொத்து வரியினங்கள் மூலம் ரூ.18.38 கோடி, 2084 காலிமனை வரியினங்கள் மூலம் ரூ.51.73 லட்சம், 2,991 தொழில் வரியினங்கள் மூலம் ரூ.69.62 லட்சம், 19.798 குடிநீர் இணைப்பு மூலம் ரூ.1.59 கோடி. 55,029 குப்பை வரியினங்கள் மூலம் ரூ.1.48 கோடி உள்ளிட்ட பல்வேறு வரி இனங்கள் மூலம் மொத்தம் ரூ.25 கோடிக்கும் மேல் வரி வருவாய் கிடைக்கிறது. மாநகராட்சிக்கு சொந்தமான 257 கடைகள் வாடகை மூலம் ரூ.1.25 கோடி வரியற்ற வருவாய் கிடைக்கிறது. சிவகாசி, திருத்தங்கல் நகராட்சியாக இருந்த போதிருந்து பல ஆண்டுகளாக நிலுவையாக ரூ.9.59 கோடி அளவுக்கு வரி வசூலிக்கப்படாமல் உள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 100 சதவீதம் வரி வசூலை முடித்தால் மட்டுமே மாநில நிதிக்குழு மானிய நிதி வழங்கப்படும் என்பதால் வரி வசூலில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சிவகாசி மாநகராட்சியில் 2024 - 2025 நடப்பு நிதியாண்டிற்கு உரிய வரியில் 88 சதவீதம் வசூல் செய்யப்பட்டு உள்ள நிலையில், 100 சதவீதம் வரி வசூலை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கமிஷனர் கூறுகையில்: மாநகராட்சியில் அனைத்து பிரிவு அதிகாரிகளும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று தீவிர வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் 31 க்குள் நடப்பு நிதியாண்டில் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை