கோயில் அருகில் ரேஷன் கடை கட்டுவதற்கு எதிர்ப்பு
அருப்புக்கோட்டை ; அருப்புக்கோட்டை வாழவந்த அம்மன் கோயில் அருகில் ரேஷன் கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் பழமை வாய்ந்த வாழவந்த அம்மன் கோயில் உள்ளது. இங்கிருந்து தான் நகரில் உள்ள பெரும்பாலான கோயில்களுக்கு தீர்த்தம் கொண்டு செல்வது வழக்கம். பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் அக்னி சட்டி எடுக்கும் பக்தர்கள் இங்கிருந்துதான் அக்னி வளர்த்து எடுத்து செல்வர். கோயிலுக்கு சொந்தமான இடங்கள் பல ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்நிலையில் கோயில் சுற்று சுவரை ஒட்டி நகராட்சி சார்பில் ரேஷன் கடை கட்டப்பட்டு வருகிறது. கோயில் சுற்றுச்சுவரை ஒட்டி வாகனங்களை நிறுத்தியும், கட்டிட கழிவுகளை கொட்டியும் வைத்துள்ளனர். நகராட்சி ரேஷன் கடை கட்டினால் கோயிலை சுற்றி வலம் வர முடியாது என பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று கோயிலின் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தினர். இது குறித்து பக்தர்கள்: கோயிலை சுற்றி கட்டடம் கட்டினால் இனி வரும் காலத்தில் கோவிலுக்கு சப்பரம் செய்தால் கூட சுற்றுவதற்கு இடம் இல்லாமல் உள்ளது. கோயில் அருகில் ரேஷன் கடை கட்டக்கூடாது. கோவிலை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கூறினார். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு
இப்பிரச்சனையில் நகராட்சியை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மாவட்ட செயலாளர் பிரபு கூறியதாவது: மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற பெயரில் கோயில் இடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுகின்றனர். இதற்காக ஹிந்து முன்னணி சார்பில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளனர். ஜனநாயக முறையில் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க அனைத்து அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும் அனுமதி வழங்கலாம் என்ற நிலையில், ஹிந்து முன்னணி மட்டும் கோர்ட் வரை சென்று தான் அனுமதி வாங்கக்கூடிய நிலையில் உள்ளது. இந்த அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. இனிவரும் காலங்களில் மக்களுக்காக குரல் கொடுக்க கூடியவர்களுக்கு இந்த அரசு செவி சாய்க்க வேண்டும். நாங்கள் இந்த விஷயத்தை மாநில தலைமைக்கு கொண்டு செல்வோம் என கூறினார்.