மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் இல்லாததால் மக்கள் அவதி
ராஜபாளையம்:ராஜபாளையம் - தென்காசி ரோட்டில் போதிய வசதியின்றி அமைந்துள்ள தற்காலிக மோட்டார் வாகன ஆய்வாளர் கிளை அலுவலகத்தால் வாகன ஓட்டிகள் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் வன்னியம்பட்டி அருகே ஆர்.டி.ஓ., அலுவலகம் அமைந்திருந்தது. போதிய வசதியுடன் கிருஷ்ணன் கோவில் அருகே அலுவலகம் திறக்கப்பட்டது. இதனால் ராஜபாளையம் தாலுகா மக்கள் சுமார் 40 கி.மீ., சென்று தங்கள் மோட்டார் வாகன பதிவு, புதுப்பித்தல், தடையில்லா சான்று போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது.தொடர் கோரிக்கையால் 2023 நவ. மாதம் தென்காசி ரோட்டில் ராஜபாளையத்திற்கென மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இங்கு வாகனங்களை ஆய்வு செய்தல், பழகுநர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கு போதிய இட வசதி இல்லாதது போன்ற பல்வேறு நடைமுறை சிக்கல் இருந்து வருகிறது.தற்போது வரை தனியார் இடத்தில் அடிப்படை வசதியின்றி நடைபெற்று வரும் இப்பணிகளை முறைப்படுத்த தற்காலிக மோட்டார் வாகன ஆய்வாளர் கிளை அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் ஏற்படுத்த வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.