சேதமான பள்ளி கட்டடம், குண்டும், குழியுமான ரோடு சிரமத்தில் அயன் நாச்சியார் கோவில் ஊராட்சி மக்கள்
ஸ்ரீவில்லிபுத்துார்: சேதமடைந்த அரசு பள்ளி கட்டடம், குண்டும், குழியுமான ரோடு, கூடுதல் பஸ்சின்றி சிரமம், சுகாதாரக் கேடு உட்பட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஸ்ரீவில்லிபுத்துார் அயன் நாச்சியார் கோவில் ஊராட்சி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கீழப் பொட்டல்பட்டி, நாச்சியார் பட்டி, பாப்பையநாயக்கன்பட்டி, ஆலத்துார், நொச்சிகுளம், தெற்குளம் பட்டி ஆகிய சேய்கிராமங்கள் உள்ளன. கீழப்பொட்டல்பட்டியில் இருந்து நாச்சியார்பட்டி செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. நான்கு முனை சந்திப்பில் ஊர் பலகை போர்டுகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். நாச்சியார்பட்டியில் இருந்து அத்திகுளம் வரையுள்ள ரோடு குறுகலாக உள்ளதால் விபத்து அபாயம் காணப்படுகிறது. நீர்வரத்து ஓடை புதர் மண்டி காணப்படுகிறது. ராஜகோபாலபுரம் ரோடு வளைவில் வாறுகாலில் தடுப்பு சுவர் இல்லை. அரசுப் பள்ளி அருகே தோண்டப்பட்ட பள்ளம் மூடாமல் உள்ளது. வங்காருபட்டி செல்லும் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. புதிய குடியிருப்பு பகுதிகளில் ரோடு, வாறுகால் வசதி இல்லை. நாச்சியார்பட்டியலில் இருந்து பாப்பநாயக்கன்பட்டி வழியாக ஆலத்தூர் வரை ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தின் முன் பகுதி கட்டடம், விவசாயிகளின் நெல் களம் சேதம், பழைய அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. சமுதாய கூட கட்டிடம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பாப்பநாயக்கன்பட்டியில் தரை பாலம் கட்டப்படுவதால் ஆலத்துார், நொச்சிகுளம் பகுதிகளுக்கு குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டு சப்ளை பாதிக்கப்படுகிறது. நொச்சி குளத்தில் சமுதாயக்கூடம் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். கண்மாய்கரையில் தடுப்பு சுவர் இல்லாமல் உள்ளது.அனைத்து சேய்கிராமங்களிலும் முறையான தூய்மைப்பணி இல்லாமல் சுகாதாரக் கேடு காணப்படுகிறது.