மண்ரோடால் அல்லல், திறந்தவெளி கழிப்பிடங்களால் தவிப்பு புல்லலக்கோட்டை ஊராட்சி மக்கள் அவதி
விருதுநகர்: சுகாதார வளாகம் இல்லாததால் திறந்த வெளி கழிப்பிடம் அதிகரிப்பு, நீர்வரத்து ஓடையை கடக்க பாலம் அமைத்து ரோடு, தலித் மக்களுக்கு மயானம் வேண்டும் உள்பட எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் புல்லலக்கோட்டை ஊராட்சி மக்கள்.விருதுநகர் ஒன்றியத்துக்குட்பட்ட புல்லலக்கோட்டை ஊராட்சியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றது. இங்குள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தற்போது 10க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் எதுவும் கிடையாது. மேலும் மாணவர்களுக்கு தனியாக கழிப்பறை இல்லை. மாணவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து உள்ளது.இங்கு வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதவர்களுக்காக பொது சுகாதார வளாகம் அமைக்கப்படவில்லை. இதனால் திறந்த வெளி கழிப்பிடங்கள் அதிகரித்து சுகாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் வடக்கு தெருவிற்கு செல்லும் ரோடு மண்ரோடாகவே உள்ளது.நீர்வரத்து ஓடையை கடந்து செல்லும் ரோடாக இருப்பதால் மழைக்காலத்தில் மக்கள் திண்டாடி வருகின்றனர். மேலும் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு கட்டடம் இல்லாமல் மகளிர் குழு கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. தனி கட்டடம் கட்டுவதற்கான பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. இங்குள்ள தலித் மக்களுக்கு சுடுகாடு இல்லாததால் நன்மை காரியங்களை செய்யமுடியாமல் பரிதவித்து வருகின்றனர். ரோடு அமைக்க வேண்டும்
கனி, தொழிலாளி: புல்லலக்கோட்டை வடக்குத் தெரு செல்லும் ரோடு நீர்வரத்து ஓடை கடக்கும் பகுதியில் மட்டும் மண்ரோடாக உள்ளது. மழைக்காலத்திற்கு முன்பு ரோடு பாலம், ரோடு அமைக்க வேண்டும். சுகாதார வளாகம்
நாகேந்திரன், தொழிலாளி: இங்குள்ள வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுகாதாரகேடு ஏற்படும் சூழல் உண்டாகியுள்ளது. எனவே பொது சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். சுடுகாடு இடம் வேண்டும்
சந்திரன், தொழிலாளி: தலித் மக்களுக்கு சுடுகாடு இடம் இல்லாததால் இறந்தவர்களை அடக்கம் செய்வது சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சுடுகாடு இடம் ஏற்பாடு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.