உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிநீர், தெருவிளக்கு பிரச்னை, நூலகத்தில் அங்கன்வாடி சிரமத்தில் வி.நாங்கூர் ஊராட்சி மக்கள்

குடிநீர், தெருவிளக்கு பிரச்னை, நூலகத்தில் அங்கன்வாடி சிரமத்தில் வி.நாங்கூர் ஊராட்சி மக்கள்

காரியாபட்டி: குடிநீர் பற்றாக்குறையால் கண்மாய் நீரை பயன்படுத்துவது, தெரு விளக்குகள். மயானத்தில் அடிப்படை வசதி, சேதமான பேவர் பிளாக் கற்கள் உள்ளிட்ட பிரச்னைகளால் வி.நாங்கூர் ஊராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர். காரியாபட்டி வி.நாங்கூர் ஊராட்சியில் கூரானேந்தல், ஆண்மை பெருக்கி, ஸ்ரீராம்பூர், விட்டிலாரேந்தல், ராபதியேந்தல் கிராமங்கள் உள்ளன. வி.நாங்கூரில் தாமிரபரணி தண்ணீர், உள்ளூர் குடிநீர் கலந்து சப்ளை செய்யப்படுகிறது. சில சமயங்களில் தட்டுப்பாடு உள்ளது.குளியல் தொட்டி மோட்டார் பழுதாகி 6 மாதம் ஆகியும் சரி செய்யவில்லை. மின்மீட்டர் திறந்த வெளியில் உள்ளதால் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. மயானத்தில் அடிப்பம்பு உள்ளிட்ட அடிப்படை வசதி கிடையாது. அங்கன்வாடி மையம் கட்டடம் சேதமடைந்துள்ளதால் தற்காலிகமாக நூலகத்தில் இயங்கி வருகிறது. அடிப்படை வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பெரும்பாலான வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் சேதம் அடைந்துள்ளன. இரவு நேரங்களில் தெருவிளக்கு சரிவர இல்லாததால் நடந்து செல்லும் போது இடறி விழுகின்றனர். கழிவுநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேட்டுக்கு வழி வகுக்கிறது. ஆண்மை பெருக்கியில் ஒரு சில வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் இல்லாததால் மழை நேரங்களில் சிரமம் ஏற்படுகிறது. தெரு விளக்கு வசதி சரிவர கிடையாது. ஸ்ரீராம்பூரில் வாறுகால் வசதி, தெருவிளக்கு, சுகாதார வளாகம் கிடையாது. கூரானேந்தலில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. கண்மாயிலிருந்து நீரை சேகரித்து பயன்படுத்தி வருகின்றனர். வாறுகால் வசதி, பேவர் பிளாக் கற்கள் உள்ளிட்ட வசதிகள் சரிவர கிடையாது. விட்டிலாரேந்தலில் சமுதாயக்கூடம், சுகாதார வளாகம் கிடையாது. ராபதியேந்தலில் நாடகம் மேடை, களம், சமுதாயக்கூடம் சுகாதார வளாகம் கிடையாது. தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிவு நீரால் சுகாதாரக் கேடு

முருகேசன், விவசாயி, வி. நாங்கூர்: வாறுகால் சரிவர சுத்தம் செய்யவில்லை. பெரும்பாலான வீதிகளில் வாறுகால் வசதி இல்லாததால் வீதியில் கழிவுநீர் செல்கிறது. மேல்நிலைத் தொட்டியை சுற்றி கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை உள்ளது. நாடக மேடை சேதம் அடைந்துள்ளது. தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை. குடிநீர் பிரச்னை உள்ளது. மயானத்தில் அடிப்படை வசதிகள் சரிவர கிடையாது. நூலகத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுவதால் சிறிது மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறையால் சிரமம்

மகாலிங்கம், கூரானேந்தல்: குடிநீர் தட்டுப்பாடு இருப்பதால் கண்மாயில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகிறோம். குடிநீர் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாறுகால் வசதி செய்து தர வேண்டும். இங்கிருந்து விட்டிலா ரேந்தலுக்கு மண் ரோடு உள்ளது. மழை நேரங்களில் செல்ல முடியவில்லை. 10 கி.மீ., சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் ரோடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

மலையாண்டி, ஊராட்சித் தலைவர்: ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. கூரானேந்தலில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. ரோடு அமைக்க நிதி ஒதுக்கியவுடன் நிறைவேற்றப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !