உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ட்ரோன் ஸ்பிரே மூலம் பூச்சி மருந்து தெளிப்பு

ட்ரோன் ஸ்பிரே மூலம் பூச்சி மருந்து தெளிப்பு

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு தாலுகாவில் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தங்கள் வயல்களில் ட்ரோன் ஸ்பிரே மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் நவீன தொழில்நுட்பத்திற்கு அப்பகுதி விவசாயிகள் மாறி வருகின்றனர்.மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வத்திராயிருப்பு தாலுகாவில் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள், கொடிக்குளம், கான்சாபுரம், நெடுங்குளம், கூமாபட்டி, வத்ராயிருப்பு, சேது நாராயணபுரம், தாணிப்பாறை, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், ஆயர்தர்மம், இலந்தைகுளம், சுந்தரபாண்டியம், புதுப்பட்டி, கிருஷ்ணன்கோவில் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் , மக்காச்சோள சாகுபடி ஆண்டு தோறும் நடந்து வருகிறது.இதற்கான விவசாய பணிகளுக்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான விவசாய தொழிலாளர்கள் கிடைத்து வந்த நிலையில், தற்போது பெரும்பாலான விவசாய தொழிலாளர்கள் பட்டாசு ஆலை தொழிலாளர்களாக மாறிவிட்டனர். இதனால் விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் நாற்றுகள் நடவு செய்யும் பணிகளை செய்கின்றனர். மேலும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அறுவடை, கதிரடிக்கும் இயந்திரங்கள் மூலம் பாதி அளவிற்கு விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பூச்சி மருந்து தெளிப்பதற்கு ஆள் பற்றாக்குறை நிலவியதால் பயிர்களை காப்பாற்ற உரிய நேரத்தில் பூச்சி மருந்து தெளிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் வாடகை அடிப்படையில் ட்ரோன்கள் மூலம் பூச்சி மருந்துகள் தெளிக்கும் தொழில்நுட்பத்திற்கு வத்திராயிருப்பு விவசாயிகள் மாறி வருகின்றனர். இதன் மூலம் ஒரு ஏக்கர் விவசாயத்தை நிலத்தினை குறைந்த நேரத்தில் ட்ரோன் ஸ்பிரே மூலம் பூச்சி மருந்து தெளிக்கின்றனர். இதற்காக ஒரு ஏக்கருக்கு மருந்து தெளிக்க 600 ரூபாய் வாடகை கொடுத்து வருகின்றனர்.இதனால் தங்களுக்கு கூடுதல் செலவினங்கள் ஆனாலும், உரிய நேரத்தில் பூச்சி மருந்து தெளித்து, பயிர்களை காப்பாற்றி நல்ல மகசூல் பெரும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ